பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

 

 

சட்டமன்றம் ஆச்சரியப்படுத்தும் பல அரசுகளை சந்தித்திருக்கிறது. வியக்க வைக்கும் பல விந்தையாளர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசு ஆச்சரியத்திற்குரியதும்  அல்ல. ஆளுகிற நானும் வியப்புக்குரியவனும் அல்ல.

 

அதிகார போதையோடு ஆங்காங்கே தென்படுபவர்களில் ஒருவன் தான் நான். தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யை உதிர்த்தேன். நல்லாட்சி தந்தவர்களை தீய சக்தி என்று கூறி நையப் புடைத்தேன்.

 

 வேலையைக் காட்டியிருக்கிறேன் இவ்வாறெல்லாம். இவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லை. சர்கார்  சத்தியமாக இல்லை!

 

 தேர்தல் நாட்களில் குட்டி கதைகளை அவிழ்த்து விட்டேன். காரணம் அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும் என்பதனால் அல்ல. அவைகளைத் தான் ரீல்ஸ்க்குள் அடக்க முடியும் என்பதற்காக!

 

 முந்தைய அரசு மீது அவதூறை அள்ளித் தெளித்தேன். எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்கள் மண்ணை கவ்விட வேண்டும் என்பதற்காக!

 

உனக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? அந்த சங்கிகளே வியக்கும் வண்ணம் வெளிப்பட்ட வன்மம்? என்று வினவலாம்.

 

தூண்டப்பட்டேன்.

 

நானே நேரடியாக தூண்டப்பட்டேன்.

 

அதிகார வெறி பிடித்தவன் என்பீர்கள். ஆம் நான் வெறிபிடித்தவன் தான். என்னையே வரி கட்டச் சொல்லி உத்தரவிட்டதால் உக்கிரமடைந்து வெறி பிடித்தவன்!

 

எனக்குப் பிடித்த வெறிக்குள்ளும் ஒரு குறி இருக்கிறது.

சம்மந்தா சம்பந்தமில்லாமல் எல்லாவற்றையும் பொருத்திப் புரிந்து கொண்டு விதற்றுவார்களே அந்த தற்குறி போன்ற ஒரு வெறி!

 

என்னை கோமாளி என்கிறார்களே. இந்த கோமாளி, வேஷமிட்ட கூத்துக்களை  குவித்து  வைத்து கிளறிப்  பார்த்தால் அவை எப்படிப்பட்டது என்று புரியும்!

 

மக்களுக்காய் போராடிய புறச்சி தடங்கல் இல்லை என் வாழ்க்கையில். ஆனால் குழந்தைகளையும் இளைஞர்களையும் மூளைச்சலவைச் செய்த அறுபத்தி ஒன்பது படங்கள் இருக்கின்றன என்னிடத்தில்!

 

காம்பவுண்டை தாண்டியதில்லை நான். ஆனால் நாயகன் பிம்பம் கொண்டு நன்மை செய்வேன் என நம்பச் செய்திருக்கிறேன்!

 

பெற்ற வெற்றியின் பின்னணியை போட்டு உடைக்கிறேன் உறைந்து போய் ஓரிடத்தில் அமர்ந்து உள்வாங்கிக் கொண்டிடுங்கள்!

 

இந்த சினிமா தேசத்திலே ஒரு இயக்குனருக்கு மகனாக பிறந்தவன் நான்.

படிக்க ஓரிடம் நடிக்க ஓர் தடம்.

பெரிய இடத்து பிள்ளைகளை வாரிசாக வார்த்தெடுத்து புகழ் கொடுத்து அரசியல் படுத்துவது நடந்திட நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

 

கவர்ச்சி ரசனை  என்னை கதாநாயகன் ஆக்கியது. கட்டவுட்டுகளுக்குள் ஏற்றி வைத்து  கடவுளாக்கியது!

 

திரைத்துறையில் உச்சத்தை எட்டிவிடும்  வித்தையை விளங்கிக் கொண்டேன்.

 

ஆரோக்கியமாய் ஆனந்தனும் ஆதவனுடன் அணிவகுத்து பின்னால் நிற்க, பழனிச்சாமி இணையத்தில் புரட்டுகளை வைத்து பாதை அமைத்துக் கொடுக்க புறப்பட்டு விட்டேன் அரசியலை போகிற போக்கில் புரட்டி எடுக்க!

 

மன்றத்துக்காரர்களை கழட்டிவிட்டேன்.

மாற்றுக் கட்சியிலிருந்து பெட்டியுடன் வந்தவர்களை கட்டியணைத்து இணைத்துக் கொண்டேன்!

ரவுடிகள் என்றும் பாராமல் சீட்டு கொடுத்து எம் எல் ஏ வாக  அவர்களை சிறைபிடித்தேன்!

 

மொத்தத்தில் என்னை உழைத்து ஆளாக்கியோரை அந்தரத்தில் அதோகதியென  கழட்டிவிட்டேன்!

 

கடைசியில் விசிலை குழந்தைகளிடம் கொடுத்து ஓட்டு போடும் பெற்றோரின் காதுகளில் ஜனநாயகத்தின் சங்காக ஊத விட்டேன்!

 

அவற்றின் பெயரோ வாக்குகள்.

 

பரிதாபகரமான பெயர்.

 

அவை எனக்கு மட்டுமே விழுந்திடும் பொருட்டு ஊடகங்கள்  எங்கிலும் ஓயாமல் ஒலிக்கச் செய்தேன்!

 

வெளிநாட்டில் இருந்து படை எடுத்தனர்.

 

ஓட்டிட தவிர்த்தவர்களும் ஒன்று கூடி விட்டனர்.

 

இவ்வாறு எல்லாம் எத்திக்கிலும் இஷ்டம் போல் பரவச் செய்தேன்!

 

ஓட்டுகள் சிதறடிக்கப்பட கட்டுக் கோப்புடன்  அமைக்கப்பட்ட எதிரணியின் கூட்டணியும் அழித்தொழிக்கப்பட்டது!

 

முந்திரிக்கொட்டையாக வந்த கைகளை ஆட்சி அமைக்கும் பொருட்டு இறுக்கமாய் கோர்த்துக் கொண்டேன்!

 

துண்டு போட்டு தோழர்களையும் சிண்டு முடித்து சிறுத்தைகளையும் வண்டாகப் பறந்து சொகுசு இருக்கை  கொண்டு சுகப்படுத்தி வசப்படுத்தினேன்!

 

புரட்சித் தமிழனும் தமிழச்சியும் வளர்த்தெடுத்த கட்சியை தேய்த்து அழிக்க  அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை ஆசை வலைவீசி அப்படியே அள்ளிக்கொண்டேன்!

 

நான் அரியணை ஏறிவிட்டேன் என்று அறிந்ததும் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர் இலைப்படகு தரைதட்டி விட்டது என்பதனை புரிந்து கொண்ட அண்ணா நாமத்தின் ரத்தத்தின் ரத்தங்கள்!

 

இடைத்தேர்தல் இழுத்து மூடப்பட்டதால் வாக்கும் போக்குமற்று பொறுமிக்  கொண்டிருக்கின்றனர் பொறுப்பை உதறிய புல்லுருவிகள்!

 

விலகாமல் அங்கேயே தொடர்ந்திருந்தால்  மன்றத்தின் மாண்புமிகுக்களாக நீடித்திருக்கலாம்.

 

அவர்களை பதவி விலகச் செய்து ஆசை வார்த்தை காட்டியது அந்த லாட்டரி கள்வன்!

 

கொள்ளையடித்து சேர்த்து வைத்திருப்பதை  காப்பாற்றிட அவர்களுக்கும் வேறு வழியுமில்லை!

 

மானத்தை தூக்கி வீசிவிட்டு துண்டையும் வேட்டியையும் கரைமாற்றிக் கொண்டு விட்டனர் என்னைப் போன்ற கண்ணியவான்கள்!

 

கட்சி விட்டு கட்சி மாறுவது ஒன்றும் அவமானகரமானதல்லவே!

 

அந்த விஸ்வகுரு.

தாய் வழிப் பிறவாத இந்தியாவின் தலை மகன்.

அவரே ஆங்காங்கே பாராளுமன்ற உறுப்பினர்களை உருவி எடுத்து பராக்கிரமத்தை காட்டி இருக்கிறார் பலநூறு முறை!

 

அதையே அச்சுப் பிசகாமல் செய்து முடிக்க தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னுடைய ஆசிப்பெற்ற அடிப்பொடிகள்!

 

இது எப்படி குதிரை பேரமாகும்?

 

தமிழன், புதிய கீதை, போக்கிரி எனும் புரட்சிகரமாக படம் எடுத்தவனுக்கு ஆட்சி அமைக்க வழி இல்லை.

 

ஆபத்தின்  குறியீடாக இருக்கும் 108 அளவிற்கு உறுப்பினர்களை பெற்ற போதிலும் அரியணை ஏறிட அழைப்பில்லை!

 

என்னை மட்டும் ஜனநாயகன் படத்தை அப்பொழுதே வெளியிட விட்டிருந்தால்,

 

பட்டிதொட்டி எங்கும் அப்படத்தினை பரவச் செய்திருந்தால்,

 

234க்கு 300 தொகுதிகளை எங்கள் ராஜாங்கத்தின் கணக்கு வழக்கின்படி  வென்றெடுத்திருப்பேன்!

 

இதைத்தானே இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்த்தா  ஜனநாயகனும் ஆசைப்பட்டான்!

 

உள்துறை மந்திரியும் பாராமுகமாக இருந்து விட்டார்,

 

சோர்ந்து போகவில்லை!

 

ஆளுணரும் அவ்வப்பொழுது  காத்திருக்க செய்து பீதியை கிளப்பினார்,

 

பேரம் பேசுவதில் இருந்து பின்வாங்கவில்லை!

 

நான் உட்பட எல்லோருமே அமைச்சர் பொறுப்பிற்கு தகுதியற்றே தென்பட்டோம்,

 

சற்றும் தயங்கி நிற்கவில்லை!

 

மண்டையைப் மன்மதமாக பிய்த்துக் கொண்டேன்.

 

போலிச் சான்றிதழ் கூட்டத்திலிருந்து பொறுப்பானவர்களை பொறுக்கி எடுத்தேன்.

 

சமூக வலைதளத்தில் கூசாது பொய் சொன்னோரை முன்னிலைப்படுத்தி மந்திரியாக்கினேன்!

 

இப்படி எல்லாம் நான் இன்னல்பட்டபோது என் உடன் நின்று இருக்க வேண்டும் இன்று ஊரே அலற  அனத்துபவர்கள்!

 

இல்லம் துறந்து ஒருத்தியின் உள்ளம் நுழைந்த இவனுக்காய் இணங்கி பேசியிருக்க வேண்டும் என்னுடைய ஏடா கூடங்களை இடித்துறைப்போர்!

 

விரித்திருக்க வேண்டும் பட்டுக்கம்பளத்தை இந்த பகவதிக்கு!

 

வீசி இருக்க வேண்டும் சாமரத்தை அழகான நாசி கொண்ட இந்த வேட்டைக்கார நாயகனுக்கு!

 

செய்தார்களா இவற்றை தீய சக்திக்கு தீர்ப்பு எழுத வந்த இந்த தூய சக்தியான கருரின் உசைன் போல்டுக்கு!

 

உனக்கு ஏன் இவ்வளவு கொலவெறி என்கிற எகத்தாளக் குரல் கேட்கிறது.

 

இது எகத்தாளமல்ல என்னுடைய எதேர்ச்சியதிகார எக்களிப்பு!

 

யாரோ ஒருவரின் பதவி ஏற்பினை தடுப்பது என்னுடைய நோக்கமல்ல.

 

எஜமானர்கள் இட்ட கட்டளைக்காக  பதவியை அலங்கரிக்கும் என்னுடைய பகிரத  பிரயத்தனமேஇது!

 

பத்திரிக்கையாளர் கூடியிருப்பதை  கண்டால் பதறிப்போய் பின்னங்கால் பிடரி தொட ஓடியதும் ஓடுவதும் ஒரு குற்றம்!

 

அப்பாவை காணவில்லை என்று அழகு கதை சொன்னது ஒரு குற்றம்!

 

மாற்றுத்திறனாளரின் அமைச்சராய் இருந்து கொண்டு அவர்களை பார்க்க மறுப்பது ஒரு குற்றம்!

 

தமிழ் மண்ணில் என்ன நிகழ்ந்தாலும் வாய் மூடி வசீகரிப்பது ஒரு குற்றம்!

 

போலியாய் பொறுப்பற்ற ஜோலிகலை போக்கிரி ஜாலியுடன் வடநாட்டில் பரப்புவது ஒரு குற்றம்!

 

மத்திய அரசின் திட்டங்களை மடை மாற்ற ஆட்டமாடி சத்தமின்றி அமல்படுத்துவது ஒரு குற்றம்!

 

சுதந்திர கொடிக்கு அளித்த சல்யூட்டின் சில துளிகளை கொடிப் பட நாயகிக்கு கொடுத்துக் குதுகளித்தது ஒரு குற்றம்!

 

இத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுக்கு யார் காரணம்!

 

அவரே! அவரே! அவரே!

 

நான் கோடிக்கணக்கான வருமானம் தரும் திரைப்படத்துறையை உதறித் தள்ளி உச்ச நட்சத்திரமாய் வந்ததும் முதலமைச்சர் பதவியை தூக்கிச் சொலையாய் தந்திருக்க வேண்டும்!

 

அழகிய தமிழ் மகனாம் எனக்காய் அனைவரும் கட்சியை கலைத்து விட்டு பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்!

 

இந்த கில்லியின் ரசிகர்களை படிக்கச் சொல்லி துன்புறுத்தாமல் படங்களை பார்த்திட அனுமதித்திருக்க வேண்டும்!

 

இப்படி எல்லாம் வசதி படுத்தி தராமல் என்னை வசைப்பாடுவது எந்த  விதத்தில் நியாயம்?

 

பெண்களுக்கு அண்ணனாய் குழந்தைகளுக்கு மாமா வாய் ஏமாலி இளைஞர்களுக்கு கோமாளி தளபதியாய் மகுடம் சூட்டப்பட்டவனை மண்ணில் கால் பட விட்டதை எங்கனம் ஏற்றுக் கொள்ள முடியும்?

 

கட்டியவளையும் பிள்ளைகளையும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்துவிட்டு என் வாய்க்கு வருவதையே வாய்மையென பேசுகிற என்னுடைய சிறப்புகளை புறக்கணிப்பது ஏற்கத்தக்கதன்று!

 

 

இதுவே என்னுடைய வாழ்க்கை அத்தியாயங்களை புரட்டிப்போட்டு தேடினாலும் உங்களுக்கு காணக் கிடைக்கிற,

 

அடக்கமின்மை!

அத்துமீறல்,

அதிகார மனோபாவம்!

அதிசயிக்கத்தக்க அடக்குமுறை!

 

 

இவன்.

 

கவிஞர்.  கலைஞர் தாசன் எனும் வெங்கோலன்!


Comments

  1. காஞ்சி கவிச்சிங்கருக்கு கனிவான வணக்கங்கள்!
    ஆஹா! தாங்கள் பராசக்தி பானியில் படைத்திட்ட வசனத்தைப் படித்து பதரிப்போய் பரவசமடைந்தேன்!
    என்னதான் இருந்தாலும் இத்தனை இருந்திருக்க வேண்டாம்!
    அப்பப்பா! தங்களின் அழகு தமிழின் அடுக்கு மொழியால் அஸ்திவாரமே அசைந்தாடும் போலவே!
    உடன் பிறப்புக்களுக்கு ஊட்டச்சத்தை ஊட்டி, எளியோரும் புரிந்திட எடுத்துக்காட்டி, கலைஞர் தாசனாக கடிவாலம் பூட்டி, உணர்த்திய பாங்கு உள்ளபடி ப்யூட்டி!

    தங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!