ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

 ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?


அது மெதுவாய் நகர்ந்து வந்து ஆடிக் கொண்டே நின்றது.


அது பொதுவாக அப்படித்தான். 


அது ஆட்டம் காண்பதற்கு பல அதிகார நாற்காலிகளே  காரணம்.


அதன் மேல் சில கீறல்களும் உண்டு. 


அதில் அமருபவர்களும்  அந்த கீரல்களுக்குள் அடக்கம்.


கீறல்களையும் அவர்களையும் கெடுப்பது வேறு நாற்காலி காரர்கள்!


வேறு நாற்காலி காரர்கள் எல்லோரும் இந்த நாற்காலியில் இருந்து போனதும் உண்டு.


வெவ்வேறு நாற்காலிகளில் இருந்து வந்து ஒருவாறு  அதை அடைந்தவர்களும் உண்டு.


அந்த ஒய்யார நாற்காலிக்கு சென்று விட்டாள் இந்த உடைந்த நாற்காலிகளை பிடிக்காமல் போய்விடும். 


காரணம் உடைந்ததிலிருந்து வருகிற ஓசை அவர்களை நிம்மதியாக அங்கு உட்கார விடாது.


அந்த ஒய்யார நாற்காலியை  ஓட்டை உடைசல் அண்டாது.


ஆனால் அவை அனைத்தையும் அதன் மேல் உட்காருபவர்கள்  வைத்திருக்கக்கூடும்!


ஒய்யார நாற்காலிகளின் கால்கள் தான் பரிதாபத்திற்குரியவை.


அதன் மேல் வைக்கப்படும் அதிகாரபாரத்தை தாங்க முடியாமல் தத்தளித்தபடி இருக்கும் அவை. 


ஆள்களின் கால்கள் அவஸ்தை உருவதையே எவரும் கண்டு கொள்வதில்லை. 


அப்படி இருக்க கால்களின் கால்கள் கண்ணீர் வடிப்பது எப்படி புரியும்?


இந்த நாற்காலிக்கு அந்த நாற்காலி எப்பொழுதுமே எதிரி என்று எந்த முக்காலி சொல்லி வைத்தது தெரியவில்லை!


இந்த நாற்காலிகளுக்குள் சமாதானம் வருவதை. 


கண் காணா அந்த  தூரத்தில் இருக்கும் கனமான நாற்காலி விரும்புவதும் இல்லை விடப்போவதும் இல்லை!


இரண்டு நாற்காலிகளும் பேசிக் கொள்வதற்கு,


ஒய்யார  நாற்காலி முன் போடப்பட்டிருக்கும் அந்த நாற்காலிகள் ஒப்புக் கொள்வதில்லை. 


முன்னிருக்கும் அந்த நாற்காலிகளுக்கு ஒய்யார நாற்காலியின், 


ஒத்திசைவும் கண்ணசைவும் இல்லாமல் ஒருபோதும் இருக்க முடியாது! 


முன் வரிசை நாற்காலிகள் தனக்கென இருக்கும் இருக்கைக்கு செல்லும் முன், 


ஒய்யார  நாற்காலி இடமிருந்து கொஞ்சம் அதிகாரத்தை ஒட்டிக்கொண்டு செல்வதே வாடிக்கை!


இதுதானே இடப்பெயர்ச்சி காணும் நாற்காலிகளுக்கு கேளிக்கை?


எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கும் அப்பாவி நாற்காலிகளுக்கு, 


நகரா  நாற்காலிகள், ,ஆயினும் நகரும் அதிகாரமும் தான் அன்றாட வேடிக்கை!


முன்வரிசை நாற்காலிகளுக்கு எதிரே இருக்கும்,


உயர்ந்த நாற்காலியாக  ஒரு நாளேனும்  ஆகிவிடும் விருப்பம் உண்டு.


அதற்கு ஆங்காங்கே இருக்கும் நாற்காலிகளை ஒட்ட விடாமல் அவை ஒட்டியிருந்து பார்த்துக் கொள்ளும்!


அவ்வப்பொழுது சில நாற்காலிக்  கூட்டங்களை  கலைத்துப் போட்டு அவை  ஆடுவதும் உண்டு!


இந்த விளையாட்டுக்கு ஏனைய சில விவரித  நாற்காலிகள் தலையாட்டமும் செய்யும்!


யார் பெரியவர் என்று  இங்கு நாற்காலிகள் மோதிக்கொண்டிருக்க, 


எங்கோ ஒரு நாற்காலி அமர்ந்து ஒரு சமூக நீதி சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது!


இவன். 


முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!