எம். எல். ஏ. என்னும் ஏழைகள்!
எம்எல்ஏ என்னும் ஏழைகள்!
ஐயோ பாவக் கால்கள் கொண்டவர்கள்,
தொகுதி வலம் வர வழியற்ற வரியவர்கள்,
பல்லாயிரம் அடி நடந்து பாதம் நொந்தவர்கள்,
நித்திரை வெறுத்து மக்களை நெருங்கிடும் நேசர்கள்,
கோரிக்கைகள் ஈடேற்ற குடிசைகளை அண்டிடும் அற்புதர்கள்,
அடிதடி தடுப்பதற்கு அன்பை ஏந்திச் செல்லும் அமைதியின் தூதுவர்கள்,
ஆற்றுப்படுகை பாதுகாக்க காற்று போல் சீறிப்பாயும் சீமான்கள்,
திட்டங்களை நிறைவேற்ற வட்டமிட்டு சுற்றிச் சுழலும் பூலோகத்துச் சூரர்கள்,
சட்டத்தை சமன்படுத்த சாரை சாரையாய் அணிவகுக்கும் சாரதிகள்,
இல்லாதோரை எட்டிப்பிடிக்க நில்லாது பாடுபடும் ஏழைப் பங்காளர்கள்,
சுயநலத்தை கரைத்து தொலைத்து பொதுநலத்திற்காய் பயணப்படும் பங்காளிகள்,
வாக்குப்பெற்று இருந்தபோதிலும் வாடகை கட்டிட வக்கற்றிருக்கும் வானவர்கள்,
பாகுபாட்டை ஒழிப்பதற்கு மேடு பள்ளங்கள் ஏறி இறங்கும் மாமணிகள்,
தன்னிடம் இருப்பதை கொடுப்பதற்கு வேகமாய் விரைந்திடும் வில் அம்புகள்,
பட்டி தொட்டியில் வசித்து நகரம் வர பேருந்துக்காய் கால் கடுக்கும் கனவான்கள்,
காணி நிலத்தையும் கொண்டிடாத சேவை ஞானி மனம் பெற்று இருக்கும் பெரும்புள்ளிகள்,
பஞ்சரான மிதிவண்டியை பழுதுபார்க்க விட்டுவிட்டு மாட்டு வண்டியில் அரசு மாளிகை அன்றாடம் வந்திடும் தோய்ந்த தொண்டர்கள் ,
வங்கி கடன் பெற்று எரிபொருள் எப்பொழுதும் நிரப்பிடும் ஏமாளிகள்,
மகிழுந்தின் ஆசையை மனதிற்குள் இதுகாறும் சேர்த்திடாத பரிதாபச் செம்மல்கள்,
தன் சொந்த சேவைக்கு ஒரு சக்கரத்தையும் இயக்க துணிந்திடாத அவதாரத் தூயவர்கள்,
ஒதுக்குங்கள் கோடிகளை அவர்கள் சொகுசின் ஒய்யாரம் காணட்டும்!
விரட்டுங்கள் புதிய கார்களை மாநில கடன்,
அதற்கென்ன
அந்த கண்றாவி
ஏறட்டும்!
முனைவர், உ. மகேந்திரன்.
Comments
Post a Comment