திருச்சியின் மண்டாடிகள்:

 திருச்சியின் மண்டாடிகள்:



பாய் மரம் இல்லை அங்கே செய்வரம் அரும்பியது!


 போட்டியிடும் குயில்கள் அல்ல, திரண்டவை கூட்டினை நேசிக்கும் மயில்கள்!


உரிமைக்குக் கொடி பிடிக்க, பாரம்பரிய நகர்விற்கு துடுப்பெடுக்க, கூடினர் ஒன்றாய் இனி இவற்றை யார் தடுக்க?


கடல் இல்லா நகரத்தில் சங்க அலை அடித்தது, மாதரின் சமுத்திரம் என்பதான  சரித்திரம் அந்நிகழ்வு படைத்தது!


மீன்களே மனமுவந்து அன்பு வலை விரித்தன, நாங்களும் வருகிறோம் என்று நேசங்களும் அதற்குள் சிறைப்பட்டுச் சிரித்தன!


பூவையில் இருந்து பிரிந்த பாவைகள் போர்த்திய  மேடைச் சால்வையும் நம்பிக்கையின் வேள்விகள் ஆயின!


அட ச்சே பெண்களா! என்றோரின் முன் முடிச்சிக்குள் நேயத்தின் பொருள் வைத்து, நாங்கள் திருச்சியின் பெண்கள் என அடடா!  உணர்ச்சியில் முழங்கினர்!


ஈரைந்து, அத்துடன் ஈராறு தேர்ச்சியில் மூன்றிடம் பெற்ற தங்கைகள்,  முன்னோடிகளால் வியந்தோத பல கோடி பரிசு பெற்ற பூரிப்பினை எட்டினர்!

அத்துடன் தாய் வீட்டிற்கே வந்த நினைவில் அன்றோ கூடினோர் கைகளையும் தட்டினர்!


விழி இழந்த மாதருக்கு வழியில்லை எனும் பழி துடைக்க, தோன்றிய இல்லத்தில் உள்ளங்கள் அணிதிரண்டன, உவகைகள் கொள்ளிடம் அற்று கரைபுரண்டன!


தாஹிரத் தமிழும் சந்திர மொழியும் தொகுப்பென தோகை விரிக்க, விழா தோப்புக்குள் இருந்தோர் வருடப்பட்டனர், ஏனையோர் நிகழ்த்திய பொழிவுகளில் இதயபூர்வமாய் திருடவும் பட்டனர்!


காவேரிப்பட்டினத்திற்குள் பூம்புகார் வந்தது போல, சிறு மன்னார்புரம் விழாக் கொண்டது, சங்க  முதலாண்டு என்னும் கோலாகலம் காட்டாற்று வெள்ளமென  நீண்டது!


சம்மந்தமும் பந்தமும் கொண்டோர்  ஒத்துழைப்பை கொட்டிக் கொடுக்க, எட்டி நின்று மனதால் நெகிழ்ந்துச் சிரிக்க, அடக்கப்பட்ட மாதர் எரிமலைகலாய்  தங்களின் எண்ணங்களை வண்ணங்களாய்  விழாப்படுத்தினர் , விலகி இருந்தோரின் நெஞ்சங்களையும் குழுப்படுத்தினர்!


தேனி என சேகரித்த தொகை கொண்டு அம்மங்கைகள் ஆர்ப்பரிக்க, அவ்வரங்கம் மட்டுமல்ல திருவரங்கமே திருவிழா எடுத்தது, உஷ்ண கதிரவனும் ஆச்சரியத்தில் அதிகமாய் சுட்டது!


யாருக்கோ அல்லது பேருக்கோ அல்ல, தன் வேருக்கு நீரூற்றிய, உண்ணும் சோறுக்கு உப்புக்கொடுத்த, பள்ளிக்கு நன்றியை ஒப்புக்கொடுத்த  ஒப்பற்ற நிகழ்வு பொன்னெழுத்தில் அச்சானது, இனி இவர்களே வழிகாட்டி என்று  உள்ளுணர்வுக்கும் தோணுது!


உடன் பயின்றோருக்கும் விடாமல் முயன்றோருக்கும் இயன்றவரை  பாடுபடும் ஒப்பந்தம் கையெழுத்தானது, மெய் எழுத்தில் இதைச் சொல்லிட சேவை மேகங்களும் சற்று நாணுது!


சோம்பல் போக்கிய விருந்தோம்பல், மன அடுக்குகளில் எதிரொளிக்கும் உபசரிப்பு, அக்கா தங்கை என அழைத்துப் பேசிய புல்லரிப்பு  நிறைந்திருக்க, நினைவுகள் நெஞ்சங்களோடு கரைந்திருந்தன!


உங்களின் சங்க இலட்சியங்கள் நிச்சயம் வெல்லும், சாட்சியாய் நின்று எதிர்காலமே அதனை உரக்கச் சொல்லும்!


அரசு பள்ளிச் சங்கம்,  கொட்டிய முன்னாள் மாணவிகள் முரசில், மதி மயங்கின எண்ணற்ற  சிரசுகள், மண்டாடிகளே  நீங்கள் செம்மைப்படுத்த காத்திருக்கின்றன நீரற்றும் பசுமை சாரற்றும் போகக் கிடந்த விழியற்ற வாழ்வியலின் தரிசுகள்!



மிகப்பெரிய சிரமத்திற்கும் கடின உழைப்பிற்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட திருச்சி பார்வையற்றோர் பெண்கள் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை, சீரும் சிறப்புமாக திருவிழாவைப் போல எல்லோரும் வியக்கும் வண்ணம்  29/09/2026 அன்று நிகழ்த்திக்காட்டிய சகோதரிகளுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய இந்த ஆவணக்கவி சமர்ப்பணம்!


இவன்,:


முனைவர், உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!

அவர்களுக்குத்தான் அனைத்தும் அத்துபடி!