யுத்த தம்பட்டன்!
யுத்த தம்பட்டன்!
இரவுகள் உறங்க இவன் உளறல்கள் விழித்திருக்கும்,
அழிவின் கனவுகள் அந்த இரத்த விழிகளின் துயில் துடைக்கும்!
கால் தூசுகளாம் நாடுகள் அவனுக்கு,
நாவினால் வால் வீசுவதே அன்றாட இலக்கு!
தேசபக்தி மருந்து கொடுத்து யுத்தம் தொடுத்தான்,
சத்தமின்றி தொழிலை பெருக்கி சொந்த முகத்திரை கிழித்தான்!
உல் நாட்டு செழிப்பே அவன் முழக்கம்,
அண்டை நாட்டு தவிப்பில் இவனின் வல்லரசானது பிழைக்கும்!
கடன்கள் பெற்ற தேசங்கள் இவனுக்கு அடிமை,
பிணங்கள் தினம் விழுந்தாலும் பேசுவான் தர் பெருமை!
கணக்கு போட்டே அவன் போற்கலம் புகுவான்,
இணங்கும் நாடுகளை இரையாக்கி மிகுவான்!
அவன் மூளைக்குள் முன்னூறு சுரக்கும்,
நொடிக்கொன்று வெளிப்பட உலகமே கைகொட்டி சிரிக்கும்!
அணி சேர்ந்த நாடுகளை தலை குனிய செய்வான்,
குனிந்த தலை நிமிரும் முன்னே கவிழ்ந்ததை கொய்வான்!
சொன்னபடி நடக்க இவனின் விரல்கள் போடும் சொடுக்கு,
கீழ்படியா தேசங்களை வேட்டையாடிடும் இவன் உத்தரவுகளோ கிறுக்கு!
தீவுகளை இவனின் அதிகார பசி விழுங்கும்,
அடடா பராக்கிரமம் இதுவென்று ஊடகங்கள் முழங்கும்!
கூட்டாளியை குளிர்விக்க மூளையை செலவிடுவான்,
உலக பாட்டாளிகள் மரணத்தை எமனாகி அளவிடுவான்!
முதலாளி இதையத்தால் தேசபக்தி புரளி செய்வான்,
முடிந்தவரை சலவை இட்ட மூளைகளின் மேல் அரளி மழை பொய்வான்!
தன் நாட்டு கண்ணாடியில் சிறு கீறல் என்றால் அலறல்,
பிற தேசம் நொறுங்கினாலும் முனுமுனுப்பதும் இல்லை இவன் குரல்!
அணுவுலை கண்டறிய தொடங்கினான் யுத்தம்,
அத்தனையும் கொடுக்கும்படி ஒலிக்கிறது இவனின் சத்தம்!
எல்லா நிலங்களும் இவனுக்கு வளங்கள்,
ஆக்கிரமிக்க நிறுவப்படும் வல்லாதிக்க தளங்கள்!
ஜனநாயகப்பேயரை சொல்லி இவனுக்கு கட்டிய பரிவட்டம்,
அல்லும் பொழுதும் ஆனதையா அதிகார வெறிபிடித்த திமிர் தம்பட்டம்!
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment