ஆண் மேகங்களின் ஆயுத மழை!

 ஆண் மேகங்களின் ஆயுத மழை!


பகை ஏவி கருக்கும் போர் முகில்,


பலி கேட்கும்  துளிகளாய் குண்டு மழை!


யுத்த முறையில் வீரம் நிரம்பிடும்,


ரத்த குலமாய் உயிர்கள் குவிந்திடும்!


கனைக்கும் ஏவுகணையில்  கம்பீர  கர்ஜனை,


அணைகட்ட முடியா நிலையில் மாண்டு சாயும் அப்பாவி சேனை!


ஊரணியிலும் பதற்றம் சுரக்கும்,


உயிர் அணியை பிளந்து பின்னணி தோள்கள் பதக்கம் சுமக்கும்!


கூட்டமாய் ஒதுங்கிட பதுங்கு குழிகளும் குலுங்கும்,


நீர்நிலை பிழைத்தலை விட உயிர் நிலை  காத்தல் கொடுமை என விளங்கும்!


இடிமுழக்க குண்டுகள் விளையாடும்,


நொடி கடத்தும் சிசுக்களின் நடுக்கங்கள் உள்ளங்கையில் உயிர் பிடித்து அலரிடூம்!


சதுப்பு நில தழுவலில்  நிறம் மாறும்,


தவிப்பு தரும் அழுகையும் விலகிப் போகும் தூரம்!


பெண் உடலையே  வின் ஆயுதம்  வலை வீசும்,


போர்க்களை தான் இதுவென்று ஆதரவு தவக்கலைகள் பேசும்!


விதவைகள் வர்க்கத்தை மேற்கத்திய ஆதிக்கம் கர்வத்துடன் அதிகரிக்கும்,


இரக்கமின்மை வெள்ளக் காட்டாராய் திசைகள் எங்கும் பெருக்கெடுக்கும்!


நரகங்களாய்  நகரங்கள் நகரும்,


சிதறிய உதிரங்களோடு உறவாடும் உளவியல் மிரட்சிக் கதை கூறும்!


ஆயிரம் மைல்கள் அவன் செலுத்தும் ஆயுதங்கள் பாயும் ,


காக்கை குயில்களும் வற்றிய கருணையில் விழுந்து சாயும்!


பிணக்கழுகுகளாய் அடர்ந்து பகைக் கருவிகள் இறங்கும்,


மூச்சு சிறகுகள் உயர பறக்க உடல்கள் உயிர் விடுத்துச்  சுருங்கும்!


ஆக்சிஜன் கொப்பளித்து ஓர் வாய் புழுதி உமிழ்ந்திடும்,


நைட்ரஜன் நெருப்பில் நவீன யுகத்தின்  ஆற்றல் அரசியலும் அமிழ்ந்திடும்!


நாடுகளை எலும்பு ஓடுகளாய்  கண்டங்களை தரிசு பிண்டங்களாய்  மாற்றிடும்,,


கடலையும் யுத்த திடலாக்கி மரணத்தின் ஆழியாய் மானுடம் உருமாற்றி காட்டிடும்!


வன்மையுத்திகள் பெருக்கெடுக்க சமதர்ம சத்தியத்தின் உடலிலும் காயம்,


ஏகாதிபத்தியம் ஜீவிக்க பஞ்சமும் ஏழ்மையும் பத்திய பரிசாக்கி  வெறுப்பு அருவி பாயும்!


திமிங்கலங்கள் யுத்தம் செய்ய போர்க்களங்கள் தடதடக்கும்,


மனித சமுத்திரத்தை பயத்தின் சிறைப்படுத்தி முதலாளிகளின் ஆயுதங்கள் படை எடுக்கும்!


கரும் புகை  தேசங்களின் வரைபடம் முழுக்க பரவி குடை பிடிக்கும்,


அவை அடைகாக்க வழியின்றி மறைந்த பின் நீராவியாய் உயிர்கள் ஆகாயம் நோக்கி நடக்கும்!


பீரங்கி பொழிவில்  ஏழு  வண்ணத்தில் வானவில்லின் எண்ணம் பிரதிபலிக்கும்,


ஆணின் தொழிலே அழித்தலென கழித்தலில் மாலும் அப்பாவி மானுடம் எடுத்துரைக்கும்!


இவன், முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!