இருபத்தி நான்கு என்னும் மத ஆணை!
இருபத்துநான்கு என்னும் மத ஆணை!
மதம் பிடிப்பதன் உருவம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
விரல்கள் இடுக்கில் வைக்கும் பேப்பர் அளவிற்கு இருக்கலாம்.
அதில் அச்சிடப்படும் வார்த்தைகளும் வரிகளும்,
சமந்த ப்பட்டோருக்கான சம்மதத்தை மிதித்து அழிக்கும்,
உரிமைகளை வதம் செய்து அதிகார ஆணவத்தில் கூத்தடிப்பதாகவும்,
இருக்கவும் செய்யலாம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் செய்யலாம்!
அரசுகளின் ஆணையில் வார்த்தைகள் பதமாய் அச்சிடப்படும்.
அந்த அச்சுக்குள் கலந்திருக்கும் நச்சுக்களை தரம் பிரித்தால்,
அருவருப்போ அல்லது உயிர் துறப்போ இரண்டில் ஒன்று உங்கள் இதயம் தொடும்!
இனி இதயங்களை பத்திரப்படுத்திக் கொள்வது கடினம்.
காரணம் அச்சுகளைக் கொண்டல்ல நச்சுகளைக் கொண்டுதான் ஆணைகள்,
வெளிவருவது வழக்கமானது அது காவு வாங்கும் பழக்கத்தை கண் மூடாமல் பேணுது!
வேலா வேலைக்கு ஆணை ரதம் எனும் அறிக்கை வரும்,
பலரின் வேலை எடுக்கும் வேலையை செய்தபடியும்,
அதிகாரத்தின் வக்கிரமாய் நிலை பெறும்,
அடச்சி இதுவன்றோ புழுத்துப் போன ஜனநாயகத்தின் நிலவரம்!
பார்வை அற்றோருக்கு கொடுத்த ஒதுக்கீட்டை பறிக்கும் பம்மாத்தும் வளம் வரும்,
உரிமை கர்ஜனை செய்த அந்த ஊனக்காரனுக்கு இதுவன்றோ பெரும் பயங்கரம்!
உடல் குறை கொண்ட ஏனையோரை,
வேலை ஏற்றம் காண வதை பட்ட தன் மானத்தோரை,
எங்கெங்கும் மறுக்கப்பட்ட வேலையை மறியல் செய்து பெற்றுத் தந்த இருள் தேசத்தோரை,
படுமோசமாய் நசிக்கிடும் அரசு ஆணைக்கு,
வைத்த பெயரோ ஒதுக்கீடு,
புரியவில்லை ஐயா இது எந்த மடையன் செய்த கணக்கீடு!
தள்ளாடிடும் தற்காலிக பணியும்,
விழியற்றவனுக்கு இன்று தள்ளாட்டம் காணுது,
துறைகள் எல்லாம் கணக்கிடுகிறோம்,
சிறப்பு தேர்வு நடத்தி ஆள் சேர்க்கும் ஆணை அதை விரைவில் விடுகிறோம்,
என்று அதிகார வர்க்கத்தின் அநியாயக்கார ஐ ஏ எஸ் துரைகளும்
அவர்களை வைத்து சுட்ட அமைச்சரின் வடைகளும்,
இருள் நட்டு வெளிச்சம் பறித்தவனை வீதியில் வீசிய சதியை அன்றோ செய்தது!
சரம்சரமாய் சட்ட ஆணைகளை கோரிக்கையாய் கோர்த்து,
முதல் அமைச்சரை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்க,
முண்டியடித்துக் கொண்டு முதலாவதாக அந்த சத்துணவே எங்களின் ஜீவனை அழிக்க வந்து நிற்க,
எங்களின் கோப்புகள் எல்லாம் கோட்டையில் ஈரம் இன்றி சிறைப்பட்டது,
அந்த அரசாங்கத்தின் மதம் பிடித்த ஆணையால்,
எங்கள் பார்வையற்ற இனமே கேட்க நாதியின்றி இன்று மிதிபட்டது!
எப்படியும் வேலை தரணும் என்று அவர் சொற்படி செய்ய வைத்தார் தகப்பன்,
எப்படி வேலை தரலாம் என்பதை முறைப்படி செய்து முடித்தார் இன்று தனயன்!
விடியல் வியாபாரி நமது வீட்டுக்காய் வந்தவன் என விட்டுள் பூச்சிகள் நினைக்க,
விட்டில் பூச்சிகளின் விடியலுக்கும் கள்ளிப்பால் கொடுத்து கொள்ளி வைக்க,
அதிகார நெடியில் வந்த சதிகார அரியாசன வெறியன் என விளங்கியது!
பட்டம் இருந்தும் ரயிலில் பார்வையற்றும் வியாபாரம் செய்கிறோம்,
நட்டமாகாது வேலை கொடுங்கள் என்று சட்டப்படி கேட்டால்,
படித்து வந்த அதிகாரிகளை வைத்து கட்டம் கட்டுகிறார்,
வேலை தராமல் இருக்க ஆணை போடுவதை எல்லாம் திட்டம் என திராவிட மாடல் பேசுகிறார்!
தகுதிக்கு வேலை தா என்று ஒரு விகிதத்தில் கேட்டாலும்,
மகுட மயக்கம் கொண்டவரின் மனதுக்கு அது விளங்கவில்லை,
யானையின் மதமும் மண்டியிடும் இந்த மமதைக்கு கட்டாயம் உண்டு ஒரு எல்லை!
இவன்.
கவிஞர்.
வெண்கோலன்.
Comments
Post a Comment