நீங்கள் அதைப் பார்த்ததுண்டா?
நீங்கள் அதைப் பார்த்ததுண்டா?
அவருக்காக தான் நீங்கள் செலுத்தி இருப்பீர்கள்.
நானும் கூட அந்த நேரத்தில் யாரோ ஒரு அவருக்காக தான் அதை செய்தேன்.
சின்னத்தில் முத்திரையிட்ட போது கூட அது இவ்வளவு சின்னா பின்னமாக இருந்திருக்கவில்லை!
அது தக்கையான மின்னணு பெட்டி.
எனது ஓட்டும் அப்படித்தான் வலுவிழந்து போய்விட்டது.
இரண்டும் பலவீனப்பட்டு போனதற்கு,
பலசாலிகள் சிலரின் அதிகார பலமே காரணம்!
நாட்டின் வளர்ச்சிக்கு ஓட்டின் தேய்மானம் தேவை என்று அவர்கள் ஒருமனதாக தீர்மானித்து விட்டனர்.
அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்தை நிர்வாணமாக்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன!
இந்தத் தீர்மானம் அந்த ஒரு மனதின் குரலை திருப்தி படுத்த எடுக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.
உங்களுக்கு அந்த மனதில் குரல் வந்து சேர்ந்ததா?
உங்களுக்கு நிச்சயம் வந்து சேராது காரணம் அந்த குரல் வேறு உங்கள் மனம் வேறு!
அந்தக் குரலும் அதன் உருவமும் காணும் இடமெல்லாம்,
முழங்கியபடியும், விழுந்தபடியும், தாக்கிய படியுமே இருக்கும்!
அது நிலைத்திருக்க வேண்டும் என்றால் அந்த எந்திரப் பெட்டியும் உங்கள் ஓட்டும் வலுத்திருக்கக் கூடாது!
நம் மனதிற்கு ஒரு குரல் உண்டு என்பது இங்கே யாருக்கும் பொருட்டு இல்லை!
இடப்பட்ட விதத்தில் தான் ஓட்டுகள் என்னும் இடத்தில் இடம்பெறுகிறதா?
என்னும் குரல்கள் அந்த எந்திர பெட்டியை போல அதனுள் போடப்படும் ஓட்டினை போல,
பொலிவிழந்து புழு போல் துடிப்பதை பொருட்படுத்த யார் தான் நமக்காய் இருப்பது?
ஒரு விதத்தில் அந்தப் பெட்டிகளும், நீங்களும் என் நானும் கூட ஒன்றுதான்.
நம்மை வைத்து நடப்பதும், நமக்கு என்ன நடக்கிறது என்பதும் நம் யாருக்குமே தான் தெரியாதே!
அந்த நவீன மர்மத்தை அழுத்தி தொட்டுவிட அது ஓசையிடும்,
உரிமையை விழுங்கி கொண்டு செய்யும் விசித்திர ஏப்பம் போல் அது அனேகமாக படும்.
செலுத்திய வாக்குகள் சங்கேத வடிவங்கள் தரித்து விடும்,
பிறகு வாக்கு இட்டதற்கு இருக்காது எவ்வித தடம்,
ஆனாலும் நான் சொல்லுவது வேண்டா வெறுப்பாய் மட்டுமே உங்களுக்கு படும்!
நீள மை வைத்துக் கொள்ளும் நம் நிலைமையை,
பெட்டிக்குள் அடைக்கும் முன் பார்த்து ஏளனமாய் நகைக்கிறது,
அந்த பிளாஸ்டிக் எந்திரம்!
இப்படி மையிட்டு ஆடுவது ஒரு விதத்தில் மர்ம விளையாட்டு,
இங்கு மை வைத்து செய்வதெல்லாம் ஒரு பொய் புரட்டு,
அதற்கு சான்றாய் வெடித்தும் கூட பற்றாமல் கிடக்கிறது அந்த வாக்கு திருட்டு!
அது இருக்கட்டும் ஒரு புறம் பார்ப்போம் அப்புறம்,
நீங்கள் செலுத்திய ஓட்டால்தான் அந்த ஆளுமை ஆளுகிறது என்று ஆழ்மனம் சொல்கிறதா?
உரிமையுடன் கடமை செய்ததால் தான் உயரங்கள் நிகழ்ந்ததாக உள்ளுணர்வு சொல்கிறதா?
எந்திரமும் ஓட்டுக்கு பின் தாமதப்பட்டு என்னும் தந்திரமும் ஒரு சரித்திரமே என்று சாதனைகள் கேட்கிறதா?
சரி இருந்து விட்டுப் போகட்டும்,
உங்களின் ஓட்டு அதை நீங்கள் பார்த்ததுண்டா?
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment