அந்த மண்ணை ஒருபோதும் வெல்ல முடியாது!
அந்த மண்ணை ஒருபோதும் வெல்ல முடியாது!
உங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு யுத்தம் செய்யுங்கள்.
யார் எந்த விளக்கம் சொன்னாலும் பின் வாங்க வேண்டாம்.
முன்னேறிச் சென்று தாக்குங்கள்!
அலறல் சத்தம் கேட்டால் என்ன?
மருத்துவமனைகள் மீது கூடாது குண்டு மழை என்பதை பொருட்படுத்த வேண்டாம்!
அந்த குண்டுகளை தனித்தனியாய் பிரித்து அனுப்புங்கள்,!
உணவின்றி வாடி ஒடுங்கி இருக்கும் வயிர்களின் மேல் சில!
ரொட்டி துண்டு காய் ஏந்தி கிடக்கும் பிஞ்சு கைகளின் மேல் சில!
பல நாள் பட்டினியை சுமந்து விழுந்து கிடக்கும் உடல்களின் மேல் சில!
இருக்க இடம் இன்றி இடம்பெயரும் கால்களின் மேல் சில!
இரவுகள் விரட்டினால் பகலிடம் தஞ்சம் புகும் தைரியத்தின் மேல் சில!
பகல் அரவணைக்க பயமின்றி படுத்து உறங்கும் எண்ணத்தின் மேல் சில!
இன்னும் நிறைய வகைகள் இருக்கின்றன அவர்களிடம் உங்கள் பகை தீர்க்க!
தோட்டாக்களை துல்லியமாய் அனுப்பி பல முதுகுகளை மோதி தகர்த்து விடுங்கள்!
அப்படி செய்வதால் உங்களைக் கோழை என்று யாரேனும் சொன்னால்,
உங்களின் தோட்டா ஒன்று அவர்களையும் குறி பார்க்கட்டும்!
ஒருவேளை உங்களின் ஆயுதங்கள் தீர்ந்து போனாலும்,
கவலை வேண்டாம் உங்களின் மதப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்,
அன்பு, சமாதானம், நேசம், பகை கொள்ளாதிருத்தல் ஆகிய வார்த்தைகளில் இருந்து,
சூத்திரங்களை சாறு பிழிந்து எடுத்து உக்கிரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யுங்கள்!
ஈவிறக்கம் இன்றி யாராவது மனித நேயம் பேசினால்!
அவர்களின் மனசாட்சி குடியிருக்கும் நெஞ்சங்களை நொறுக்கி விடுங்கள்!
உங்கள் சொந்த தேசமே போர் புரிவதை போராடித் தடுத்தால்,
அதை திசை திருப்ப பிணை கைதிகள் குறித்து பேசி,
பிணங்களைக் குறிக்கும் விளையாட்டில் பின்னிப்பிணைந்திருங்கள்!
உங்களின் வாரிசுகள் பிறக்கும் பொழுதெல்லாம்,
அந்த யுத்த பூமியில் கிடக்கும் அகதிகளுக்கு,
வாரிசுகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பகுப்பாய்ந்து உங்களின் முறை தவறா வன்முறை கொண்டே செய்து விடுங்கள்!
பெண்கள் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக ஆயுதங்களை,
சந்தேகத்திற்கு இடமின்றி பிரயோகித்து, இருக்கும் மற்றும் இருக்கப் போகும் உயிர்களை கருவறுத்து விடுங்கள்!
தலைகள் விழவில்லை என்றால் இலக்குகளை இன்னும் துரிதப்படுத்துங்கள்!
வன்முறை வெறியாட்டத்தை நிறுத்தச் சொல்லி அமைதி ஏந்தி யாரேனும் வந்தால்,
உங்கள் வன்முறையில் இருக்கும் நியாயத்தை சொல்லி அவர்களை அப்புறப்படுத்தி விடுங்கள்!
உணவுகளையும் உடைகளையும் பல நாடுகள் அனுப்பி வைத்தால் என்ன,
அவற்றை பூச்சு அறிக்க காத்திருக்க வைத்துவிட்டு கனிவோடு கணக்குகளை முடித்தபடி இருங்கள்!
ஆயுதங்கள் வீசி வீசி பாவம் உங்கள் கைகள் வலித்தால்,
தானியங்கி நவீனத்திடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு பதுங்கரையில் இளைப்பாருங்கள்!
உங்களுக்கு அந்த இடம் கிடைக்கும் வரை இடிகள் என எந்திரங்கள் இசைந்து கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்!
அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது உங்களின் குண்டுகள் அவர்களின் உடலுக்குள் உள்ளுர வேண்டும்,
இந்த இரண்டில் ஒன்றினை இடைவிடாத செய்து,
ஹிட்லரிடம் கற்ற பாடத்தில் முடிந்தவரை ஊறி கொலைகார பட்டத்தில் தேறி விடுங்கள்!
அவன் ஆரியத்தில் காரியக்காரன் நீங்கள் காசாவை அழிக்கும் ஒப்பற்ற வீரன் என்பதில் ஒன்றுபடுங்கள்!
இனப்பெருமை பேசுபவனுக்கு தானே பிணங்களின் அருமை தெரியும் என்பதை வரலாற்றில் பதிவேற்றி விடுங்கள்!
புல் பூண்டு கூட இல்லாமல் பிடுங்கி எறிந்து விடுங்கள்,
பிறகு உங்களின் ஆயுதங்களை அந்த ஆண்டவன் முன்வைத்துவிட்டு,
கண்கள் மூடி அமர்ந்தால் ஒன்று புரியக்கூடும், அல்லது உங்கள் மனதிற்குள் நிச்சயம் ஓடும்,
அந்த அப்பாவி மக்களை வீழ்த்தியும் விரட்டியும் இருக்கலாம் ஆனால் மண்ணை ஒருபோதும் வெல்ல முடியாது என்று!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்.
சிறப்பு காத்திரமான படைப்பு தமிழும் தங்களுக்கு படைப்பதற்கு கை வருகிறது தமிழும் தங்கள் கவிதையை தாருங்கள்
ReplyDelete