மழலை அரசியல்!

 மழலை அரசியல்! 



ஊதிப் பெருக்கப்படுகிறது ஒரு புகழின் உச்சம்!


ஊதுவதை வைத்து சாதிக்கும் திட்டம் போல!


ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பதே  புதுமுழக்கம்!


முழக்கத்தின் மயக்கத்தில் மூர்க்கத்தனமாகிவிடுகிறது முட்டாள்தனம்!


ஓதாமல் கூட இருந்து  விடுங்கள் ஆனால் ஊதாமல் இருக்க வேண்டாம்,


சொல்லியபடி எதிரொலிக்கிறது அசுத்தங்களின் அலறல்!


பால் மறவா பாலகர்களுக்கு பாலாடையில் ஊட்டப்பட்டது அபத்தத்தின் விஷம்!


பந்தடிக்கும் கரங்கள் வாக்குச்சாவடிக்குள், பெற்றோரை சுண்டி இழுக்க,


 சங்கினை ஊத  சாகடிக்கப்பட்டது  ஜனநாயகம்!


யாரிடமும் சொல்லாமல் எடுக்கப்பட்ட ஜனநாயகன்  வெளிவந்தது,


ஆனால் கூடி  கேட்டாலும் இனி கெடுக்கப்பட்ட ஜனநாயகம் வெளிப்படுவது  கடினம்!


வலைதள திரையரங்கில் அரசியல் படப்பிடிப்பின் அரங்கேற்றம்,


தடையின்றி நடந்தது கரை மறந்து சுழன்றது!


அலைகடலென இளைஞன் திரண்டானாம்,


ஆர்ப்பரிக்கும் வாக்களிப்பில் இரண்டற கலந்தானாம்,


எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் எண்ணப்படும் அவனின் வாக்குகளில் எண்கள் இருக்கும் இதயம் இருக்காது!


தலைமுறை மட்டுமல்ல அவனின் இளையத்  தளபதியும் ஒரு இடைவேளை தான்! 


இடைவெளிகளை விருப்பம் போல்  நிரப்பிக் கொள்ளுங்கள்,


தொடர்ச்சிகளால்; அம்பலப்படுத்தப்பட்டு தோல் உரிக்கப்படும் வரை!


குறுகியவைகளை கண்டு உருகுபவைகல் உணர்ச்சிகளால் பெருக்கெடுக்க,


குறுக்கு வெட்டப்பட்டு குத்துயிராய்  துடித்து கிடக்கிறது  மாண்புகளின் உயிர்!


எங்கெங்கும் அவன் பேச்சு,


அவனைக் குறித்து எதுவும் பேசக்கூடாது என்று சொல்வீச்சு,


பாரபட்சம் பார்க்காமல் ஆதரவாளர்களின் அவதூறு கல்விச்சு,


நின்று போனதே நேர்மையை காத்திட்ட மூச்சு!


பிள்ளைகள் மன்றாடிட ஓட்டுகள் திண்டாடியது!


தலைவன் இவனே என்று தற்குறிகள்தான் கொண்டாடியது!


மிட்டாய் குரல்களும் துட்டின் விரல்களும் கூட்டணி வைத்ததில்,


பெருச்சாளிகள் உறங்கி குறட்டை விட்டன,


அவற்றின்  வாள்கள் தான் ஆன்லைனில் போக்கிரி  போரிட்டன!


பிஞ்சுகளை பழுக்கச் செய்து அரசியல் மஞ்சத்தில் கொழித்திட,


கூச்சம் உதறிய கோபுர குரல் வஞ்சத்தை விதைத்தது!


காதுக்குள் ஊதச் செய்யும் குரோதத்தை கக்கினான்,


அன்னைக்கும் அப்பனுக்கும் முன்னறிவிக்கும் துரோகத்தை உருவாக்கினான்!


அவனைக் காட்சி என  காண வாசல் தாண்டிய பிஞ்சு கால்களை, 


நச்சுப் பாம்பென சுற்றிக்கொண்டு இல்லம்  நுழைந்தது அபாயத்தின் அரிதாரம்!


அவனை அரியணை ஏற்றிட  தலையணைகள் மோதிக்கொண்டன!


படுக்கைகளை சுருட்டி வைக்கத் தெரியாதவைகள் எல்லாம் பரிந்து பேசி  உடுக்கை அடித்தன!


உணவு, உடை, உறைவிடம் அண்டியிருப்பவை ஓட்டிடும்படி மண்டியிட்டன!


ஓட்டுரிமை இல்லாதவைகள் ஏதோ அழுது கொண்டே  நாட்டுடைமை பேசின!


அரை ட்ரவுசரும் அருணாக்கயிறுகளும் அவர்களின் அண்ணனுக்காய் அத்துமீறின!


அவனின் தம்பிகளும் நம்பிகளும்  நடுத்தெரு நாயனம் இசைத்தன,


அந்தக் கூத்தாடி ஓட்டுத் தேடி வந்ததால்,


பதினெட்டு கூட  எட்டாத ஊள  மூக்கும்  பிஞ்சு நாக்கும் எல்லோரையும் தாக்கிப் தரமற்று  பேசின!


தூய சக்தியின் தீய புத்திக்கு,


பல் துலக்க முழுதாக பழகாதவர்கள் தானா தேர்தல் யுக்தி?


குருவி தலையில் பனம்பழம் அதை ஏற்றி வைத்தது ஒரு திரை குருவி!


பகல் வெயில் பொறுக்க முடியாதவன் நிலாச்சோறுகளை வைத்து ஆடிய நஞ்சாட்டம்!


ஏழை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் பாரம்,


புதிய வருகையால் அரசியலில் நேர்மை போயேவிட்டது  வெகு தூரம்!


இவன், 


முனைவர், உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!