காதலே நீ இருக்கும் வரை!

காதலே நீ இருக்கும் வரை ஆன்மாக்கள் அழியாது! 

காதலே நீ நடமாடும் வரை பாசாங்குகள் தலையெடுக்காது! 

காதலே நீ சுவாசிக்கும் வரை நம்பிக்கைகளின் புதுப்பிப்பு நின்று போகாது! 

காதலே நீ தொடும் வரை விரல்களின் இதயம் மாரடைப்புக் கொள்ளாது! 

காதலே நீ பெண்ணென  உலாவும் வரை அவமானங்கள் அரியணை ஏறாது!

 காதலே நீ சமூகத்தை காவல் எனக் காக்கும் வரை கற்பிதங்கள் கால் மேல் கால் போடாது!

காதலே உன் நேர்மை விளிம்புகளுக்கு விலாசமாகும் வரை வெளிச்சங்களின் மூர்க்கத்தனம் தலை விரித்தாடாது!

காதலே உயிர்களுக்கு  ஊட்டச்சத்தென நீ திகழும் வரை   வதந்திகள்  வல்லாதிக்கம் செய்யாது!

காதலே நீ இணைகளை இரண்டு தேகக்  கோட்பாட்டில் இருந்து எட்டி அப்பால் வைக்கும் வரை  உடல்களின் மீது செய்யும் அரசியல் பிழைக்காது!

காதலே  காற்றென மழையென நீ உயிர் விதைக்க அவதரிக்கையில் செயற்கைகளின் சினுங்கல் செல்லுபடி ஆகாது!

காதலே நீ கொண்டிருக்கும் எளிமையை குறிஞ்சி மலராய் அவ்வப்பொழுது அடையாளம் காட்டிட காகித மலர்களின் ஆர்ப்பரிப்பு நிலைக்காது!

காதலே உனது உரையாடல் அமைதி மொழியாய் நிகழும் வரை கூச்சல்களின் ஆரவாரம் பெரும் ஓலம் என உயராது!
https://youtu.be/F0TFNgo5qpE?si=yBnxc6T7fGcWvzHz
இவன். 

முனைவர், உ. மகேந்திரன்!





Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!