ஒரு நடிகன் வேடிக்கை பார்க்கிறான்!

 ஒரு நடிகன் வேடிக்கை பார்க்கிறான்! 


அவனுக்கு அது கைவந்த கலை! 


கைவந்த என்றா  சொன்னேன்? ஒரு சின்ன திருத்தம் கண் கொண்ட கலை!


அவன் கொண்டிருக்கும் கலையில் ஏராளம் கழிக்கப்பட்டு விடும்.


அந்தக் கழித்தலில் நிறைய கூட்டலும் குவிந்திருக்கும்!


கூட்டலும் கழித்தலும் ஒன்று கூடி லாவக பெருக்குதல் காணும் அதனால் அவற்றை வகுத்தல் கடினம்!


கண்ணையும் கலையையும் சொல்ல வந்துவிட்டு கணக்கில் ஆழ்ந்து விட்டேன் பொறுத்துக் கொள்ளுங்கள்! 


இதற்குப் பின் உங்களின் மனக்கணக்கு மர்ம கணிப்பானாக செயல்படுவதை தடுக்க முடியாது!


தடுத்தாலும் அது என்னும் எங்களை கட்டுக்குள் வைக்க முடியாதே!


அவன் காணும் கலையை நீங்களும் தானே கண்டீர்கள்? 


ஆனால் நீங்கள் அவனிடம் என்ன காண்பீர்கள் என்பதை உங்களுக்கு முன்னே அல்லவா அவன் கண்டு கொண்டான்! 


அவன் கண்டு கொண்ட இடத்தில் நீங்கள் நின்று கொண்டு அவனை அதிசயிக்க தொடங்கி விட்டீர்கள்!


நீங்கள் அதிசையிப்பதையும் அவன் பார்த்துவிட்டு தான் எனப்படுவதின் ஊடே உங்களை பரிகசிக்க தொடங்கி விட்டான்!


உங்களின் ரசிக வாடிக்கையை கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு உச்ச நடிகனாய் ஊதிப் பெருகிவிட்டான்!


உங்களுக்கு அவனிடம் என்ன பிடிக்க வேண்டும் என்பதை உங்களுக்கே பிடிக்கும் படி உணர்த்திவிட்டான்.!


உங்களின் மனதை ஒட்டுமொத்தமாய் குத்தகை எடுத்துவிட்டு கூத்தாடி என்பதை மறந்து குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டான்!


இனி நீங்கள் அவனுக்கு கட்டுப்படுவீர்கள் என்று கண்டுணர்ந்து கட்டளை போடலாம் என அதிகாரக் கணக்கு போட்டு விட்டான்!


அவன் நடிக சாகச காரண் மட்டுமல்ல வேடிக்கை வியாபார சூரன்!


வேடிக்கையாய் இருந்தவன் கேளிக்கையை கருவியாக்கி ஆளும் மாளிகையை,


ஒரு நாழிகையாவது வசப்படுத்தி விட விஷத்திட்டம் போட்டு விட்டான்!


இப்பொழுது உங்களுக்கு கைக்கு வராத கலை ஒன்று இருக்கிறது சொல்கிறேன் கவலையுடன் அதை கேட்டுக் கொள்ளுங்கள்!


படங்களில் நடித்து இளையவரை கெடுக்கும் தடங்களில் அவன் முத்திரை இடுவதற்கு,


எந்த தடங்கலும் நேராது உங்களின் எந்த படமும் அவனை சென்று சேராது!


அவன் பார்ப்பது மட்டுமல்ல வேடிக்கை,


அவனைப் போல் பார்க்க விரும்பும் கோடிக்கணக்கான கண்களை உற்பத்தி செய்தது இனி துரத்துமே ஐயோ அதற்கு எப்படி இருக்கப் போகிறது தணிக்கை!


அவன் வேடிக்கை பார்த்து நட்சத்திரமாய் எழுந்து விட்டான், 


ஆனால் அவனைப் போல் பார்த்தவர்கள் அவனிடம் விழுந்து விட்டனர் விளங்கியதா?


அவனும் அவனைப் போல் வேடிக்கை பார்ப்பவர்களும் கொண்டிருக்கும் கண்கள் வேறுதான்,


ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு காணுகிற காட்சியில் தான் இறக்கமும் ஈரமும் ஒரு மருந்துக்கும் இல்லை!


அவனால் வேடிக்கை பாக்கப்படுபவைகளுக்கு இனி விடுதலை கிடையாது என்பது வேதனை தான் என்ன செய்ய?


படப்பிடிப்பு கருவி போன்று அவனின் கண்களுக்கும் எந்த பாரபட்சமும் கிடையாது. 


அந்தக் கருவியை கூட காண்போர் நினைத்தால் கட்டுப்படுத்தலாம்,


இந்தக் கள்ள மவுன காரனின் வியாபார காணுதலுக்கோ ஒரு வெட்கமும்  அவஸ்தையும் கிஞ்சித்தும்  கிடையாதே!


அவன் செய்யும் வேடிக்கைக்கு பின்னால் இருக்கும் எல்லாமே படப்பிடிப்பு தான்!


அவன் பேசுவதும் உறவுக்காரன் என பம்முவதும் கூட அந்த வேடிக்கை பார்க்கும் படப்பிடிப்பினை தூக்கிப் பிடிக்கத்தான்!


இவன் எனப்பட்ட எல்லாவற்றையும் அவன் எனப்பட்ட ரசிகன்,


ஒரு சவம் போல் உணர்ச்சி அற்று கிடந்து உடன் இருக்கிறானா என்றல்லவா இரக்கமின்றிவேடிக்கை பார்க்கிறான்!


தனக்கென ஒரு தறி கெட்ட கூட்டம் தன்மானம் விட்டு தன் பின்னால் வருகிறதா என்றல்லவா கூச்சமின்றிவேடிக்கை பார்க்கிறான்!


அறிவை விடுத்து உணர்ச்சிகள் மறுத்து,


அடிமைகளாய் தனக்கு கடமைகள் செய்ய எத்தனை இளமைகள் இருக்கிறது என்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறான்!


தன்னால் பல உயிர்கள் மடிந்த போதும் தன்னை காப்பாற்ற தற்குறிகள் தவமாய் தவமிருப்பதை தன்மானம் விட்டு அன்றோவேடிக்கை பார்க்கிறான்!


வீட்டுக்குள் தன் வீரத்தை பூட்டி வைத்துக் கொண்டு வெளியே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நடிகர் என்னும் விரசத்துடன் அவன் வேடிக்கை பார்க்கிறான்!


ஒரு சமூகமே அழிந்தாலும் தன் புகழ் மங்காமல் இருக்கிறதா என்று ஐயோ மானங்கெட்டு அன்றோவேடிக்கை பார்க்கிறான்!


ஜனநாயகம் சிறைபட்டுச் செத்தாலும் தன்மேல் கறை படாமல் இருக்கிறதா என்று காவாலிப் பயல் போல் ஏவலாளிகளை விட்டு எப்பொழுதுமே வேடிக்கை மட்டுமே பார்க்கிறான்!


இவன். 


முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!