வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்!
வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்!
நீங்கள் நான் என்கிற சாதாரணத்திற்கு அது சாத்தியம் இல்லை.
முட்டி முயன்றாலும் சாதாரணங்களுக்கு எதையும் சாத்தியப்படுத்தும் சாதகம் இன்று இல்லை!
பாதகங்கள் கூர்மைப்பட்டு பாதங்களுக்கு கீழ் பள்ளமே பறித்தாலும்,
ராட்சத வெள்ளம் ஆளும் அணைக்கட்டே கைவிட்டிட அழித்தாலும்,
ஒழுங்கிட்ட விதிகள் வழங்கிட்ட கணவான்களினாலேயே மழுங்கிட்டு போனாலும்,
சங்கங்களாய் பிரிந்து உறங்கிட்ட வேளையில்,
அடிமை விலங்கிட்டு கல்வி அதிகாரம் எவன் வீட்டு சொத்தாய் ஆனாலும்,
ஆசிரிய சாதாரணங்களால் பொற்கால அரசின் வேதகணங்களை அசைத்திடவே முடியாது!
அசைத்திட வேண்டிய அத்தனை பலத்தையும்,
மொத்தமாய் அளவிட்டு அங்குலம் அங்குலமாய்,
பிளவிட்டு உலை வைத்தார்களே ஐயோ அந்த,
ஆளும் கலையில் கரைக்கண்டு சில மலை உண்ட மாதவன்கள்!
இன்று அவர்கள் கொண்டு வந்திருக்கும் நிலையோ,
பெரும் விலை கேட்கும் கொலைபாதகம் கொண்டது!
அது உயிர் எடுக்க முடிவெடுத்துவிட்டது கத்தியால் அல்ல புத்தியால்!
அதன் புத்திக்குள் பொதிந்திருப்பது தான் ஐயா விஷக்கத்தி!
அது தாக்கி நம்மை வீழ்த்த தலை படுகிறது என்பது,
தாமதமாக அல்லவா புலப்படுகிறது!
விதிகளைத் தளர்த்தி ஏழை பிள்ளைகளின் மதியை,
நிர்மூலமாக்கி வதம் செய்து தனியார் ரதம் செலுத்த,
நிதம் கணக்குப் போடுது ஜனநாயக பசுந்தோள் போர்த்தி முதலாளிகளின் கைக்கூலிகலாய் பொறுப்பற்று ஆடுது!
கல்வி தழைத்து ஓங்கிய வளாகங்களை,
அடித்தட்டு ஒதுக்கிட்டு விளக்கை அணையாமல் காத்த கற்றலின் கலன்களை,
அடிமைப்பட்ட ஜனங்களின் மனங்களில் மரியாதை விதைத்த புண்ணிய இடங்களை,
சமத்துவ கல்வியின் மகத்துவ நீதியை நின்று நிலைபெற செய்த நிகரில்லா நிலங்களை,
குப்பனின் குழந்தையும் தன் அப்பனின் தலையெழுத்தை மாற்ற,
உயர் கல்வியால் கற்பனை கற்றுத் தேர்ந்த தன்னிகரில்லா தடங்களை,
மாநகர், நகர், பஞ்சாயத்து என வகைப்படுத்திய விதி என்னும் சதியை,
ஒன்றுபட்டு மிதித்திட வேணாமோ இல்லை எனக்கென்ன என்று விலகத்தான் கற்றோராய் ஆனோமோ!
ஏழை குழந்தைகள் காலரை தூக்கிவிட்டு நடக்க,
ஏக்கர் கணக்காய் இருக்கும் ஈடு இணையற்ற இடங்களை,
அரசே எடுபிடியாய் இருந்து அதை ஏவிவிட்ட தனியார் தரகர்களுக்கு,
ஐயோ இனாமாய் தருவதை புரட்சிஜனமாய் மோதி தடுத்திட வேணாமா!
இவன்.
கவிஞர். வெண்கோலன்!
Comments
Post a Comment