தனியார் பேய் பிடித்த அரசு!
தனியார் பேய் பிடித்த அரசு!
ஆளும் அரசாங்கம் என்று செய்தி அறிக்கை அவ்வப்பொழுது வருது.
உண்மையில் அது ஆடும் அரசாங்கமாக ஆகி ஆண்டுகள் அதிகம் ஓடிவிட்டது.
அப்படி ஆடவில்லை என்றால் அது ஆட்டம் கண்டுவிடும் என்பதில் ஐயமில்லை!
ஆட்டம் காணச் செய்ய ஒரு கூட்டம் கவன குறைவின்றி நோட்டம் விட்டுக் கொண்டே தான் இருக்கிறது!
நோட்டம் விடுபவரின் நோக்கத்தில் ரொக்கம் மட்டுமே பக்கம் பக்கமாக இருக்கும்,
அது விற்கும் வாங்கும் நெருக்கத்தில் நிரப்புதலை சேர்க்கும்!
ஆட்டம் காணாதிருக்க அவ்வப்பொழுது சட்டம் திட்டமிட்டு,
ஆளுபவரை ஆட்டி வைக்கும் ஆட்களின் ஆசையை வட்டமிடும்!
அந்த வட்டமிடுதலில் நேர்மையின் கொட்டம் அடங்கும் என்பது மட்டும் திட்ட வட்டம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று சான்றளிக்கப்பட்டதும் சற்று சறுக்கி விட்டது போல.
கைதேர்ந்த அரசு என்று புகழ்ந்துறைக்கப்படுவதில் புலகாங்கிதம் கொள்ளத் தொடங்கி விட்டது அது!
வேண்டியதைக் கொடுத்து மக்களிடமிருந்து ஆட்சியை கரப்பதில் சிறந்த பின்,
கடை விரிக்க தொடங்கிவிட்டனர் போராட்ட தடை விதிக்கும் மாண்புமிகு மாமணிகள்!
தடை விதிக்க சொன்னதும் அவர்கள் யாருக்காய் அரசையே கடை விரித்து காத்திருக்கிறார்களோ அந்த கனவான்களே தான்!
அரசின் அங்கத்தை அவர்களுக்கு தாரை பார்க்க அதிகார சேற்றை வீச,
ஆளாய் பறக்கின்றனர் ஒரு நாளையும் விட்டுவிடாமல் படு தூளாய்!
தூபம் போடும் தூயவர்கள் உடனிருக்க,
சாபத்தின் பலம் பெற்ற சான்றோர்கள் சாமரம் வீச,
பாவத்தையும் ஏலம் விடும் எட்டப்பர்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்க,
பல ரூபத்தில் திசை திருப்பும் கேவல கோமகன்கள் கைகோர்க்க,
கல்விக் கூடங்களும் நல்ல லாபத்தில் விற்பனை நடக்குது,
அதை அடக்கி தடுத்துட நினைத்தால் அரசாங்கத்தின் விரல்களோ அடக்கு முறையுடன் சொடுக்குது!
அது உதற தொடங்கியதில் எல்லாமே சிதறவிருக்கிறது!
பொறுப்புகளை அப்பப்பா எதிர்ப்புகளை ஏறி மிதித்து,
துறப்பதற்கு எத்தனை திறப்புகளை சட்டச் சாவி கொண்டு,
கட்ட கட்டமாய் திறந்து விடும் தீய செயலை ஐயோ தீர்க்கமாய் செய்கிறது!
எல்லாவற்றையும் எல்லோருக்காகவும் கட்டிக் காக்க அல்ல,
தனியார் பணப்பெட்டி காரனிடம் அரசுக்கான எதையும் விட்டு வைக்காமல்,
அள்ளிக் கொடுப்பதில் அல்லும் பகலும் துள்ளி குதித்து,
கோடிகளின் சில கோமகன்கள் கொழுத்திட,
திட்டவட்டமாய் சட்ட திட்டங்களை வில்லாக வளைத்து,
துட்டு மட்டுமே போதும் எனும் ரூட்டில் அல்லவா அது இந்த நாட்டை நகர்த்தி போகுது!
அடித்தட்டு கல்வி என்றால் மேசையில் அனைத்தும் தூங்கும்,
உயர் தட்டு மேலும் உயர வேண்டும் என்றால் அதிகாரத்தின் கை ஓங்கும்,
அதற்காக அரசிடம் இருந்து இல்லை அரசாங்கத்தையே அந்தத் தனியார் எனப்படுவது விலைக்கு வாங்கும்!
எல்லோரும் படித்திருக்க செய்வதால் தானே இந்த அரசையே பிடித்திருந்தது?
ஆனால் அதனை தடுத்து ஒழிக்க இன்று நினைத்திருக்கும் அரசுக்கு நிச்சயமாய் தனியார் பெய்தானே பிடித்திருக்கும்!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்.
Comments
Post a Comment