ஐயோ இரும்பாதே செல்லமே!
ஐயோ இரும்பாதே செல்லமே!
எத்தனை முறை உனக்கு எடுத்துச் சொல்லி
புலம்புவது?
சளியும் ஜுரமும் அண்டாமல் ஐயோ எப்படி
உன்னை காப்பது?
பொத்துக்கிட்டு கொட்டும் வானமும்
பத்திக்கிட்டு எரியும் சூரியனும்,
ஆக்ரோஷ ஆள் மாறாட்டம் அவ்வப்போது
செய்கையில் அரும்பே உன்னை எப்படி மீட்பது!
நம்முடையது ஏழை குடில் என்று அறிந்தும்,
எண்ணற்ற கிருமிகள் இலவசமாய் தங்கிப்
பிழைத்திட நினைக்கையில்,
அவை தாக்கினால் தங்கமே எப்படி உன்னை
அனைத்து தடுப்பது?
குறும்புக்கார அத்தைகளும் கொஞ்சிட
நினைக்கும் பாட்டிகளும்,
ஒழிகிடும் மூக்குடன் உதட்டு முத்தம் தர
உன் அருகே வந்தால்,
அப்பால் இரு அது ஆபத்து என்று உன்னிடம் எப்படி மண்டியிட்டு
சொல்வது?
விளம்பரங்களில் பல வண்ணத்தில் வலம்
வரும் குளிர் பானங்களில் இருந்து,
என் முத்து குழந்தையே உன்னை மூழ்க
விடாமல் எங்கனம் கரை சேர்ப்பது!
பெருமழை பெரும் பணி காலத்தில் இரும்ப
நீ நேரிடுமோ,
என்று உறுத்திடும் நினைப்பை எங்கனம்
உரு தெரியாமல் அழிப்பது!
மண்ணில் ஓடியாடும் என் பிள்ளைக்கு உடன்
கூடி ஆடும்,
நச்சு கிருமிகள் குறித்து எப்படி
கொஞ்சி கதைத்து கடத்துவது!
நாவில் வழிக்கிடும் நடனத்தை செய்திடும்
பணி கூழ் உன் பல் படாமல் எந்த
பள்ளக்கில் வைத்து பார்ப்பது!
உன் அப்பன் ஆத்தாவை போல் நைந்து போன வீட்டுக் கூரையில் இருந்து,
சிறு மழைக்கே துளித்துளியாய் கொட்டும்
தூறலால் உன்னை,
தும்மல் ஏதும் தொட்டு விடாமல் அந்த
நிலவின் தொலைவில் எப்படி வைப்பது!
குடித்துவிட்டு வரும் உன் தகப்பன்
பிடித்து வரும்,
போதை இருமலிலிருந்து எப்படி உன்னை என்
இதயத்தில் வைத்து காப்பது!
உன் வெண் சிரிப்பு விலாசத்தை பின்
தொடர்ந்து வரும் வரட்டு இருமலை,
விரட்ட கை வைத்திய கிழவியை எந்த கண்டம்
போய் கூட்டி வருவது!
என் பிள்ளை சித்திரத்தை அந்த பிணி
தரித்திரம் பிடிக்காமல்,
கசக்கும் மனித வாழ்வில் கனியாய் வந்த
அந்த கண்மணியை,
எந்த சலிச்சனியும் பிடித்து வாட்டாமல்,
எந்த மருந்து மலைக்கு எடுத்துச் சென்று வளர்ப்பது!
பெரும் தவத்தின் வழிவந்த உன்னை,
விஷ மருத்துவத்தின் மருந்திடம் இருந்து
எங்கனம் பொத்திக் காப்பது!
வண்ண பூச்சிக்கு கலந்திடும் நச்சுகளை,
இருமல் போக்கிடும் புட்டியில் கலந்திடும்,
காசு வெறி கயவர்கள் கணக்கின்றி பெருகிட,
உன் இருமலுக்கு எப்படி என் உணர்வு
சட்டம் கொண்டு உறவு தடை விதிப்பது!
உறங்கிடும் மலரே நீ இருமிட அலரும்
மெல்லிய தொண்டை மண்டலத்தை,
நவீன சிகிச்சை எனும் இன்னல் தொடாமல் இருக்க,
நான் நம் வீட்டில் இருக்கும் ஒற்றை
சன்னலை எத்தனை முறை அடைப்பது!
மருந்தகங்களில் மறுத்துப்போன மனித அகங்கள்
மருந்துகளை விற்பதால்,
என் செல்லமே இனி எப்பொழுதுமே
இரும்பாதே!
விற்பனைக்கூடங்களில் கருணை தரைதட்ட
குறைந்து போனதால்,
எங்கள் குழந்தை காவியமே குலுங்கி
குலுங்கி இரும்பாதே!
மருந்து உற்பத்திச் சாலைகளில் நேர்மையின்
நெஞ்சம் ஒரு வேதிப்பொருளாய் ஆனதால்,
விக்கலே வந்தாலும் தளிர் விந்தையே
வீணாக இரும்பி வைக்காதே!
இயற்கை கடலின் முத்தான உன்னை
தாய்மார்கள் தம் சொத்து என சுமந்து எடுப்பதை,,
துச்சமென கருதும் இக்கால மருந்துகள் பெருக்கத்திற்கு
மத்தியில்,
எங்கள் வாழ்வின் மாமருந்தே மறந்தும் இரும்பவே செய்யாதே!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment