அமைதியை சில காலம் இழந்த உலக அமைதியின் விருது!

 அமைதியை சிலகாலம் இழந்த உலக அமைதியின்  விருது!


கண்டிப்பாக வெகு நாட்கள் அது தூங்கி இருக்காது. 


உறக்கத்தை பறிகொடுத்து சில மாதங்கள் உருண்டோடி இருக்கும். 


கவலையால் கண்ணீர் சிந்தி கனத்துப் போய் கிடக்கும்.


புலம்ப ஆல் இன்றி புழுங்கிக் கொண்டிருக்கும். 


அதிர்ந்து பேச பழகி தொலையாததால் அருவருப்பில் வெதும்பி கொண்டிருக்கும்.


அமைதிக்கு உரியவர்களின் கையை அலங்கரித்த ஆறுதலை அன்றி வேறு எதுவும் அதற்கு இருக்காதே!


தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று


தன்னிலை மறந்து எரிச்சல் உற்றிருக்கும்,


எனக்கு ஒன்று கொடுத்து விடுங்கள் என்று அவன் எச்சரித்து கேட்கும் போதெல்லாம் 


மூச்சடைத்து இதயம் நின்று முச்சந்தியில் கிடந்திருக்கும்!


ஆயுதங்களை அனுப்பி வைத்துவிட்டு போரை நிறுத்திவிட்டேன் என்று,


அதிகார மமதையுடன் அவன்  அவ்வப்பொழுது அறிக்கை தந்த  போதெல்லாம், 


நான் அமைதியாக இல்லை விட்டு விடுங்கள் என்று அழுது புலம்பி இருக்கும்! 


நலிவடைந்த அதிபர்களை வேறு நாடுகளில் இருந்து  அழைத்து, 


பரிந்துரைக்க செய்து வல்லரசு திமிருடன் வெறியாட்டம் போடுகையில்,


அந்த ஆல் ஃப்ரெண்ட் நோபலுக்கு அருகே அடக்கம் செய்து விடுங்கள் என்று ஆற்றாமையில் அலறி இருக்கும்!


விருது கொடுத்தூ  விடுங்கள் வேண்டாம் என்று தடுக்கவில்லை, 


என்னை பலி கொடுத்து அது வேண்டாம் என்றுதான்,


பதற்ற கோலத்துடன் பயந்து அல்லவா தவித்திருந்தேன்!


அவனுக்கோ  நான் ஒரு மகுடம்! 


எனக்கோ  அவன் ஒரு அதிகார சத்தம் எழுப்பும் அபாய சங்கு!


சூழலியல் அழிவை வெறும் வதந்தி என சொல்லுபவனை, 


நான் எப்படி மாலை எனச்சூடி என்  சுயமரியாதை இழப்பது?


நடக்கும் எல்லா உலக யுத்தங்களுக்கும்  ஏதோ ஒரு துவக்கமாக இருந்த தேசத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்து, 


மனசாட்சியை துச்சம் என துறந்த துரோக விதை வீரனின்,


தோள் தொட்டுவிட்டால் நான் எப்படி உயிர் வாழ்வது?


தன் நாட்டை எழில் படுத்தி உயர்த்த எனைய நாடுகளை தொழில்படுத்தி நசுக்கும், 


நெஞ்சின் மேல் எப்படி என் கம்பீர நிழல் படர விடுவது? 


பல தேசத்து உழைப்பை சுரண்டி விட்டு, 


அதில் தன் பிரஜைகளின் செழிப்பை சிறப்படுத்தும்,


காரியக்காரனின் கரம் பட்டிருப்பின் எவ்வாறு கண்ணீர் விடாமல் கிடப்பது?


தன் கட்டுக்குள் வரா நாடுகளை,


தண்டிக்க வரிகளை சிந்திக்க மறுத்து விதிப்பவனின், 


கன்னங்கள் சிரிப்பால் மலர்வதை ஐயோ கண்டு எப்படி முகம் காட்டி நடப்பது? 


தன் கொடி படர்ந்து வீச பிற பிரதேச குலக்கொடிகளை,


செலவின சட்ட திட்டம் போட்டு திட்டமிட்டு அழிப்பவனை,


உலக அமைதியின் தலைமகன் என்று தகுதிப்படுத்தி பிறகு நான் எப்படி நிலைப்பது!


யுத்தங்கள் தன் நாட்டை அண்டாமல் இருக்க,


கண்டங்கள் கடந்து தன் பண்டங்களை விற்று, 


அனைவரும் அனைத்திற்காக இரண்டு பட்டு நிற்பதில், 


ஒன்றுபட்டிருக்கும் பேராசைக்கார பிரதிநிதியை பிணைப்பதில் நான் எங்கே இனிப்பது!


தனக்கு முந்தைய தலைவனுக்கு என்னை கொடுத்ததை கோடிட்டு, 


எனக்கு என்ன குறை என்று கிளிப்பிள்ளை மொழி பேசும்,


தற்புகழ் தான்தோன்றிக்கு சிரம் தாழ்த்தி அய்யோ நானா வழங்கிட்டு சேர்வது!


எதையும் நினைத்ததும் வாங்கி பழகிய வியாபாரிக்கு,


ஆதிக்க வல்லரசின் அதிபர் பொறுப்பை விற்றதற்கு,


அவன் என்னையும் அன்றோ இனாமாக கேட்கிறான்,


இன்னும் அந்தப் பதவி வேலைக்குள் எதையெல்லாம் வாங்க முடியும் என்று அல்லவா பார்க்கிறான்!


பெண்களை இழித்து பேசி செல்வந்த எண்களில் குளித்து இருப்பவனிடம் இருந்து, 


நல்லவேளை இம்முறை தப்பினேன்,


அந்த வெனிசுலா மகளுக்கு என்னை கொடுங்கள் என்று,


நோபல் குழுவிற்கு எடுத்துச் சொல்லி விக்கித்திருந்த என்னை விடுவிக்க,


நம்பிக்கையின் ஜனநாயகம் தப்பியது, 


உலகெங்கும் உயிரான அமைதி அன்றோ பரவி நிரம்பியது!


I இவன். 


முனைவர், உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!