அந்தக் கரூர் மரணங்களுக்கு ஓர் கண்ணீர் தோய்ந்த இரங்கற்பா!

 அந்தக் கரூர் மரணங்களுக்கு ஓர் கண்ணீர் தோய்ந்த இரங்கப்பா!


உடல் வியர்க்க நீங்கள் காத்திருந்தது உயிரை துறக்கதானா!


சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை சுமந்தது ஐயோ இறுதியில் சுருண்டு விழ  தானா!


தாகத்தில் நா  தடுமாறினாலும் கலையாமல் நிலைத்தது இறுதியாய் தடுமாறத் தானா!


உணவு உண்ணாமல் அந்தக் கனவு அரிதாரத்தை காண துடித்தது துடித்தே மரணிக்க தானா!


பல மணி நேரம் நகர்ந்தபோதும் நகராமல் நின்றது ஐயோ அகால இறப்பை அனுபவிக்க தானா!


கால்கள் வலிக்க கண்ணிவைத்துக் காத்திருந்தது கடைசியாய் கண்ணை மூட தானா!


விடுமுறை தினம் எனப் பாராமல் வெளியே வந்தது பிணங்களாய்  திரும்பப் போகத் தானா!


நடனக்காரன் திரும்பி விட்டான் அவனைப் பார்க்க வந்த நீங்கள் திரும்ப மாட்டீரோ?

நீங்கள் அங்கு இறக்கவில்லை எங்கோ இறந்து போனீர்கள் என்று இரக்கமின்றி பேசுகிறார்கள் வந்து ஏன் என்று கேட்க மாட்டீரோ! 


தரமற்ற பேச்சை கேட்க வந்து, மனித ஈரமற்ற  கூட்டத்தைக் கண்டதால் அய்யோ  இப்படி சிரம் விழுந்து செத்தீரோ!


தாய்மாமன் என்று சொன்னான் தவிக்க விடமாட்டான் என்று நம்பி,


வந்து பிறகு உண்மைக் கண்டு உணர்ச்சி செத்து விழுந்தீரோ!


உங்கள் வீட்டில் ஒருவன் என்று சொன்னதெல்லாம் உங்களை ரோட்டில் கிடத்தி  விட்டு,


ஓட்டம் எடுக்க தானா என்று புரிந்த பின் பூத உடலாய் ஆணிரோ!


வெள்ளித்திரை காரன் ஜெயிப்பதற்கு வேலுச்சாமி தரை மேல் பலி கேட்பது என்ன நியாயம்?


முதுகெலும்பும் பிடரியும் கூசும் அளவிற்கு ஓடுபவனுக்காக  பலரின் குருதி ஓட்டம் நிற்கலாமா?


தனக்கு கூட்டம் திரளுவதை கணக்கு காட்ட பூந்தோட்டங்களை தீயிட்டு எரிப்பது என்ன தர்மம்?


வசிகனாய்  இருந்தவன் ஜனகனாய் மாற ரசிகனாய் இருந்தவர்கள் நசுங்கிச் சாகனுமா!


ஏரோபிளேன் காரனுக்காக ஏழையின் உடல் தீயில் வேகணுமா? 


ஒரு துரும்பும் தீண்டாமல்  இருப்பவனுக்காக பல அரும்புகள் கதறி கருகணுமா?


திரைப்பட சாகசக்காரன் அரியணை ஏற அன்றாட கூலிகளாய் இருப்பவர்கள் புகைப்படம் ஆகணுமா?


நீங்கள் நடித்துக் கொள்ளுங்கள் அதை அடகு வைத்து நாட்டைப் பிடித்துக் கொள்ளுங்கள்,


அதற்காக அன்னாடம் காட்சி அப்பாவிகளை துடிக்க வைத்து மண்ணில் அடக்கணுமா?


உங்களின் பிள்ளைகள் எல்லாம் ஏசியில் இளைப்பாற,


பாழாய் போன அந்த நடிப்புக்காக உங்களை நேசித்த எங்களின் பிள்ளைகள் வெயிலில் வதங்கி ஒழியனுமா?


அண்ணன் வருகிறான் என்று நம்பி  அணிவகுத்த எங்களின் தங்கைகளின் ஆத்மா துடிதுடித்து வெளியேறணுமா?


படிப்பை விடுத்து உன் நடிப்பில் நாட்டம் ஆகி மூடர் கூட்டமாய் திரண்ட என் தம்பிகள் முச்சந்தியில் விழுந்து மாண்டு போகணுமா?


ஏழைகள் இறந்து  விழுந்தால் கேட்க இந்த சமூகத்தில் நீதி இல்லையோ?


அவர்களின் மரணத்திற்கு கண்ணியத்தை ஒரு பாதியேனும் தர  இங்கு ஒருவருக்கும் நாதி இல்லையோ?


உங்களின் அதிகாரப் பசிக்கு எங்களின் உத்வேக சிறுசுகளையும்,


தன்மான சிரசுகளையும் வேட்டையாடுவது நியாயமா வெட்கமற்ற வேட்டைக்காரர்களே!


கில்லி என்று சொல்பவன் தன்னைக் காக்க பல்லி என்று பதுங்குவதற்கு,


பாவப்பட்ட பிள்ளைகள் தொடர்ச்சியாய் பல்லம் மூடி மறையனுமா!


மண்ணில் விழுந்தும் மாண்ட மனிதச்  சாமிகளே,


நீங்களே இங்கு மாறிப்போன காட்சிக்கும் இனி வரப்போகும் ஆட்சிக்கும் சாட்சி!


அவனை துதி பாடுபவர்களின் நாக்கு வேண்டுமென்றால் நரம்பின்றி  பேசலாம்!


உங்களை நினைத்து கோடிக்கணக்கான கண்கள் குளமாகி கிடக்கின்றன!


எண்ணற்ற இதயங்கள் இறுகிப் போய் இருக்கின்றன! 


இளகிய உள்ளம் படைத்தவர்கள் உடைந்து போய் துடிக்கின்றனர்! 


உங்களின் வீழ்ச்சியில் நடிகனின் பின்னால் ஓடும் இந்த தமிழ் மண் தலை கவிழ்ந்து நிற்கிறது! 


நீங்கள் போகவில்லை. 


வேலுச்சாமி மண்ணிலிருந்து இந்த தமிழ் மண்ணின் அரசியல் அநியாயங்களை களையெடுக்க,


ஜனநாயகத்தின் குரல்கள் நசுக்கப்படுவதை வேரோடு துடைத்தூ தடுக்க,


ஓட்டையும் நாட்டையும் வேட்டையாடும் வெறி பிடித்தவர்களிடமிருந்து சமத்துவத்தை மீட்க,


மக்களாட்சியின் குலச்சாமிகளாய் இருந்து இம்மண்ணை காக்க தான் போகிறீர்கள்!


ஜாதி, மத மற்றும் பணத்திமிர்  கொண்டு நடத்தப்படும் அரசியலை நையப் புடைக்க தான் போகிறீர்கள்! 


அந்த உறுதியுடன் இளைப்பாருங்கள் உறவுகளே! 


இவன். 


முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!