அதனுடன் சில வார்த்தைகள்.
அதனுடன் சில வார்த்தைகள்.
உன்னையும் என்னையும் கேட்டு இங்கு எதுவும் நடப்பதில்லை.
நீ வெறும் ஜன்னல், அல்லது வாசப்படி, அல்லது சாதாரண கதவுகள், ஒருவேளை நீ என்பது நான்கு சுவர்கள் தான்!
நான் என்பதும் ஏறக்குறைய அப்படித்தான்.
இந்நேரம் உனக்கு அது விளங்கி இருக்கும்.
உன்னுடைய செங்கல்லும் என்னுடைய குருதியும் ஒரே நிறம்.
ஆனால் அதனால் ஒன்றும் செய்துவிட முடியாது.
நீ ஒரு இடம் நான் ஒரு ஜடம் என்னும் எதுகையே நம்மை இணைக்கிறது.
நான் இஸ்திரியால் பளபளக்குறேன் நீ மேஸ்திரியால் உடல் வளர்க்கிறாய்.
மேலே சொன்னதற்கு என்ன விளக்கம் என்று கேட்கிறாய்.
இங்கே விளக்கம் எதற்கும் கொடுக்கப்படாது கேட்கவும் கூடாது விளங்கியதா?
எதுகை சொன்னது போல் ஒரு மோனையும் சொல்லுகிறேன் எரிச்சல் அடையாமல் கேட்டுக் கொள்.
உன்னை பத்துக்கு பத்து என்று அளக்கலாம்.
பலம் அதனை முன்னிறுத்தி சொல்வதை மட்டும் கேள் என்று என்னை அடக்கலாம்!
அங்கு இருப்பவர் நம்மோடு இருந்தவர்.
ஆனால் இன்று நமக்காக இல்லை அவ்வளவுதான்.
அவர் நினைத்தால் நம்மை ஒன்றிணைக்க முடியும்.
ஆனால் அவருக்கும் நமக்கும் இடையில் தான் கால்கள் கொண்ட கலைகள் முளைத்துவிட்டனவே!
நம்மோடு விளைந்து கிடக்கும் மற்ற பயிர்களே மசமசத்துப் போய் இருக்க.
கலைகளை கடிந்து கொண்டு என்ன நடந்துவிடும் இங்கே?
என்ன சொல்கிறாய் உன் சகாக்கலான மற்ற அறைகளுக்கும் அச்சம் வந்து விட்டதா?
அறைகளுக்கு அது வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!
அவர்களுக்கு வரவில்லையே என்பதில் தான் அதிர்ச்சி வருகிறது!
ஒரு ரகசியம் கேட்கிறாயா?
அதை ஏன் ரகசியமாக கேட்கிறாய்?
இங்கு ரகசியம் அதற்கு அவசியம் இல்லை காரணம் இங்கு ரகசியமாக எதுவும் இருக்கவில்லை இருக்க விட்டதும் இல்லை!
அதற்காக ரௌத்திரம் கொண்டும் கேட்டு விடாதே!
அதனால் ரகசியத்திற்கு சற்று தள்ளி, ரௌத்திரத்திடமிருந்து வெகு தூரம் எட்டில் நின்று உடனே கேள்!
என்னது உன்னை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள் என்றா கேட்கிறாய்?
நல்ல வேலை இதைக் கேட்க வேண்டிய நேக்கு போக்குடன் கேட்டுத் தொலைந்தாய்!
பாவம் நான் பதில் தருவேன் என்று நம்பி வேறு கேட்டிருக்கிறார்!
உனக்கும் எனக்கும் எப்பொழுதுமே கேள்விகள் மட்டுமே கொடுக்கப்படும் அல்லது வைத்திருக்க வேண்டும்.
பதிலோ அல்லது பதிலுக்கு பதில் நாம் எதுவும் கேட்க கூடாது!
எனக்குள் இருக்கும் உன்னையும் உனக்குள் இருந்த என்னையும் வேண்டுமென்றால் பிரித்திருக்கலாம்.
நீ சுமக்கும் என் நினைவுகள் நான் கொண்டிருக்கும் உன்னுடைய கணங்கள்.
அதனை தாக்கலாம் ஆனால் ஒருபோதும் நீக்க முடியாது!
ஒரேவொரு அறிவுறுத்தல் உனக்கு.
செய்வாயா அன்பு கூர்ந்து?
மாணவ கண்மணிகளோ அல்லது எங்கள் மேல் மதிப்பு கொண்ட மனிதர்களோ,
வந்து உன்னிடம் நானும் நாங்களும் எங்கே இருக்கிறோம் என்று கேட்டால்,
இருக்க முடியாத இறுக்கமான இடத்தில் இருப்பதாக மட்டும் சொல்லி விடுவாயா?
அவர்கள் ஒருவேளை எங்களைத் தேடி வரக்கூடும் அல்லவா?
சரி பிறகு பேசுகிறேன் உன்னிடம்.
நீ மட்டும் தான் என் பேச்சை கேட்கிறாய் என்பதால் பேசுவேன்!
முனைவர். உ. மகேந்திரன்.
Comments
Post a Comment