நட்சத்திர ஏலமும் அந்த மரண ஓலமும்!
நட்சத்திர ஏலமும் அந்த மரண ஓலமும்!
அவர்கள் ஏற்றி வைத்த உயரம் தான்.
இன்று துயரமாய் பெற்றுக் கொண்டனர்.
உயரத்திற்கும் துயரத்திற்கும் இடையே,
ஈரமும் இதயமும் இல்லாத இடையிடுகள்.
அந்த இடை ஈடுகளுக்கு அந்த உயரத்தின் மீது ஆத்திரம்.
அதனை அறியாத துயரங்கள் மரணத்தோடு மட்டுமல்ல,
உயிர் கொண்டிருக்கும் பல்லாயிரம் உடல்களிலும் இல்லாமல் இல்லை.
அவை மரணம் தொட்டுவிட்டன இருப்பவை தன்மானம் விட்டு விட்டன!
அதை விட்டு ஒழித்த தன்மானத்தை ஒன்று திரட்டி,
கவர்ச்சி வெளிச்சம் கூச்சமின்றி போட்டுக் கொண்டது அந்த நட்சத்திரம்!
தன்மானம் பெற்று உயிர் மண்டியிட்டு கிடக்கும் அந்த மனித கூட்டத்தோடு,
மோதி அரசியல் ஆட்டம் ஆடுகிறது அந்த புகழ் மோகி நட்சத்திரம்!
கண்ணியம் இல்லா அந்தக் கவர்ச்சியை,
கனிவை ஒழுக்கத்தை வேடமிடம் மட்டும் வெட்கமின்றி தூக்கிச் சுமக்கும் அந்தப் போலி மலர்ச்சியை,
மொய்த்துக் கிடக்க மந்தையிட்டுக் காத்திருந்தன அந்த மனித ஏமாளிகள்!
ஏமாளிகளுக்கும் கோமாளிகளுக்கும் என்னதான் ரத்த பந்தமோ தெரியவில்லை!
அந்த பந்தத்தை பகுத்தறிந்தும் பிரித்தெறிய முடியவில்லை,
பலமுறை கருத்துரைத்தும் கருவறுக்க இயலவில்லை!
கோமாளிகளின் அபிமானிகளாய் அவை கூச்சமின்றி ஆனதை,
வகுத்தெடுத்து துடைத்தெரியவும் வழி ஏதுமில்லை!
உயிர்களை துச்சப்படுத்தி தொற்றப்படுத்தி காட்சிப்பட்டுப் போன வீரமற்ற அந்த வெளிச்சத்தோடு,
லட்சியத்தை அடகு வைத்து அருவருக்க சுருங்கி விட்டன,
திரையிடம் அரசியல் விடை கேட்டு நிற்கும் பெரிய இதயம் கொண்ட ஈசல்கள்!
அவை தன்னையே வட்டமிட்டு பறக்கத்தான்,
திட்டமிட்டு வலம் வருகிறது அந்த நவரச நச்சு!
அந்த நவரச வியாபாரத்தில் விளைந்த ஆதரவை,
நலிந்த கூட்டத்திடம் நயமாய் பேசி விற்க,
சனி நாட்களில் ஜனநாயக பணிவடை செய்கிறதாம்,
அந்த சினி நாயகச் செம்மல்!
இதர நாட்களிலும் வார இறுதியிலும் இரு வேறு படப்பிடிப்புகள் அதற்கு,
முதலாவது வெளிவந்த பின் அது திரை தொடும் நடிப்பு,
இரண்டாவதோ கரை பட்ட கவர்ச்சியின் பிழைப்பு அவ்வளவுதான்!
இரண்டிற்கும் இடையே சிறை பட்டு பொதுவாக தரை தட்டி நிற்கிறது ஜனநாயகம்!
மாநிலத்தின் மத்தியில் ஒரு மரணப் படப்பிடிப்பு!
அதில் வேடிக்கை என்னவென்றால்.
காண வந்தவர்கள் பூசி கொண்ட அரிதாரத்தின் பெயர் மரணம்!
அவர்களை காண வரவைத்த அந்த அரிதாரத்தின் நடிப்போ வெகுச் சிறப்பு!
இதில் நீங்களும் நானும் குறைபட்டு கொள்ள ஒன்று இருக்கிறது.
நம்மால் அந்த பலி கேட்கும் வெளிச்சத்தை பார்க்க வந்தவர்களின் சிலரை இனி பார்க்க முடியாதே!
ஆனால் அந்த வெளிச்சத்திற்கு எதுவும் கூசப்போவதில்லை,
அந்த வெளிச்சத்தால் இனி எத்தனை கூச்சலும் ஓய்ச்சலும் கூட போகிறதோ தெரியவில்லை!
பிறந்ததும், சற்று வளர்ந்ததும் அவைகளைப் பெற்றதும் விழுந்து மடிய,
அந்தத் திரை மீட்பரின் எழிலில் சிறைப்பட்ட சில இளமையும் முதுமையும் கண்மூட,
தன்னைக் காக்க விண் ஊர்தி பிடித்து விரைந்தது அந்த ரட்சக நட்சத்திரம்!
இதில் தப்பித்தலும் பழி போடுதலும் போட்டி போட,
மங்கிப்போய் மரணிக்க தொடங்கி விட்டது அந்த மரணங்களின் ஓலம்!
படப்பிடிப்புகளுக்குப் பிறகு வீடு சேர்ந்து பழக்கப்பட்ட அந்த நட்சத்திரத்தின் கால்கள்,
இப்பொழுது மட்டும் மாறுபட்டா செயல் படும்?
கொன்றவர்கள் தான் இங்கே நாட்டை வென்றவர்கலாய் வீற்றிருக்க,
புதியவர் கணக்கு போடும் கீதையின் பாதை எப்படி பலி இன்றி நீளும்?
எது நிகழ்ந்ததோ அது சற்றும் ஈவு இரக்கமின்றியே நிகழ்ந்தது!
எது நிகழ இருக்கிறதோ அதிலும் இதயம் இருக்கப் போவதில்லை!
அப்படி இருக்க,
யாருக்கு தெரியும் அந்த கவர்ச்சி நட்சத்திரமும்,
அந்த அப்பாவி ஓலங்களும் எவரால் நிகழ்த்தப்பட்ட அரசியல் ஏலங்கள் என்று!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment