ஜனநாயக அகதிகள்!
ஜனநாயக அகதிகள்!
அவர்கள் அகதிகள் தான்.
இல்லை என்று யார் சொன்னாலும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஒரே மொழி பேசினால் என்ன?
ஒரே நீரை பருகி ஒருமித்த காற்றை சுவாசித்திருக்கட்டுமே?
அவர்கள் அகதிகள் தான் யாரும் மாற்ற முடியாது.
ஏன் அவர்களே நினைத்தால் கூட அதை மாற்ற வாய்ப்பில்லை.
அவர்களுக்காக யார் வந்து நின்றாலும் அந்தப் பதத்தை உடைக்க முடியாது!
அவர்களுக்கும் அவர்களுக்காய் பேசும் அவர்களின் அவர்களுக்கும்,
ஜனநாயகம் குறித்து என்ன தெரியும்?
எல்லையற்று இருத்தல் அது என்பீர்கள் அதற்கு ஒரு எல்லை வகுக்குறோம்,
தொழிலாளி வர்க்கம் தான் ஆனால் இடம்பெயர்ந்தால் அதை பறிக்கிறோம்!
நாங்கள் அடையாளங்களை அட்டையில் வைத்ததே எதற்கு தெரியுமா?
எங்களுக்கு தேவைப்படாத பொழுது சட்டை செய்யாமல் இருக்கத்தான்!
எங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட மாட்டாது நினைவிருக்கட்டும்!
எங்களுக்குப் பிடித்தவர்களாக அவர்கள் மாற வேண்டுமென்றால்,
அவர்களுக்கு பிடித்த, எங்களை எதிர்ப்பவர்களுக்கு பிடித்த எதுவும் அவர்களுக்கு பிடிக்கக்கூடாது!
எதற்கு இந்த தொல்லை அதனால் எல்லை விளையாட்டை தொடங்கி விட்டோம்!
அவர்கள் அந்த எல்லைக்கு போகவில்லை என்றால்,
நாங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்வோம்!
அவர்களின் மூதாதையர்கள் இங்கு பிறந்து வாழ்ந்தார்களாம்.
அதை எப்படி எங்களால் ஏற்க முடியும்?
எங்களின் மூதாதையர்கள் தான் இங்கு பிறக்கவும் இல்லை,
இங்கிருந்த எவரோடும் கலக்கவும் இல்லையே!
அவர்கள் வறுமையில் இருப்பதை எப்படி மாற்றுவது?
அதனால்தான் அவர்களையே மாற்ற புறப்பட்டு விட்டோம்!
இந்த மாற்றத்தை ஒருகாலும் மாற்ற முடியாது!
இதற்கிடையில் முன்னேற்றம் கேட்டு அடிக்கடி முறையீடு வேறு செய்து தொலைகிறீர்கள்.
இதற்குப் பொருந்தும் வண்ணம் முன்னேற்றத்தின் முகப்புரையையே அதனால் மாற்றிவிட்டோம்!
ஆதலால் அநேக ஜனநாயக அகதிகள் இனி உற்பத்தி செய்யப்படுவார்கள்!
ஒரு உதவி உங்களிடம் கேட்கிறோம்,
அங்க அடையாளங்களை கொஞ்சம் வெளிப்படையாக வைத்திருங்கள்,
எவை என்று எதிர் கேள்வி வேண்டாம்,
ஒரு தசாப்தம் கடந்தும் அதை வராமல் பார்த்துக் கொண்டோம்,
இனியும் எந்த எண்ணமும் அப்படி இருந்து விடக்கூடாது ஜாக்கிரதை!
சரி உதவி செய்ய தயார் தானே?
குல்லா தாடி போன்றவற்றை வைத்திருங்கள் வெளிப்படையாக,
அவை பார்த்ததும் கண்டறிந்து கொண்டு விட வசதியாக இருக்கும்,.
நீங்கள் தாண்ட போவது வெறும் நாட்டின் எல்லை மட்டுமல்ல,
வரலாற்றில் ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் காலக்கோடுகளையும் தான்,
அதனால் உங்களை அக்கறையில் பத்திரமாக விட்டு விடுவோம் அக்கறையாக,
நாடுகளையும் கற்பனைக் கோடுகளையும் கடக்கும் கூடுகலாக பயணப்படுங்கள்!
எங்களது பொட்டு வைப்போரின் தேசத்தில் உங்களை எப்படி விட்டு வைக்க முடியும் சொல்லுங்கள்!
நீங்கள் ஒரேயடியாக போய்விடவும் கூடாது புரிகிறதா?
உங்களில் சொச்சமேனும் இல்லாமல் போய்விட்டால்,
நாங்கள் மக்களை பிளவு அச்சமூட்டி ஆள்வது எப்படி!
எனவே மூட்டை முடிச்சுகள் தயாராக எப்பொழுதும் இருக்கட்டும்!
எங்களை மூர்க்க குணம் கொண்டவர்கள் என்று மட்டும் நினைத்திட வேண்டாம்.
அப்படிப்பட்டவர்களாக இருப்பின் எப்படி முகாம்கள் கட்டித் தருவோம்?
ஆகவே அடங்கி இருப்பதை தொடங்கி விடுங்கள் புரிகிறதா?
நாங்கள் இருக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல உங்கள் மேல் இறக்கப்பட்டவர்களும் தான்.
அதனால்தான் அகதிகளாய் உங்களை ஜனநாயகப் படுத்தியிருக்கிறோம்!
இவன்.
முனைவர்.
உ. மகேந்திரன்!
Comments
Post a Comment