உம்! அந்த முகமூடிகளுக்கு என்ன குறை!

  உம்! அந்த முகமூடிகளுக்கு என்ன குறை! 


இவை அடையாளம் இல்லாமல் அனைத்தும் செய்கின்றன. 


அனைத்தும் செய்யப்படுவதன் அடையாளமாகவும் இருக்கின்றன! 


முகங்களை மறைக்கும் தொழிலாளிகள் இவை.


தொழிலாளிகள் என்றா சொன்னேன்?


அது அபத்தம், ஆகவே ஒரு சின்ன திருத்தம்!


அவை கோழைகளுக்கு கவசமாய் திகழும் கைக்கூலிகள்!


ஆனால் அவற்றை நான் பரிதாபிக்கிறேன்.


முகத்தை மூடா ஆர்வத்துடன்  எதற்கென்றா  கேட்கிறீர்?


அதற்க்கு விளக்கம் தரும் முன் ஒன்றினை உரைத்துவிடுகிறேன்!


என் எதற்கு என்றெல்லாம்  கேட்கும் முகத்திற்கு எப்படி இருக்க முடியும் மூடி!


கேளிக்கைக்கு வேலி உண்டு கேள்விக்கு இல்லை தானே?


கேள்வி  கற்றவர்  எல்லாம் கேலி தீ சுட்டவர்,


இது நீங்கள் கேட்காமலே தரும் கொசுறு செய்தி!


அது சரி பரிதாபித்தது எதற்கோ! என்று  நீங்கள் பரிதவிப்பது புரிகிறது.


அவை கூட்டு சேர்கிறதோ  இல்லையோ அதிகம் ஊட்டு பெறும்!


ஆகவே அதன் கைகள் தடித்திருக்கும்!


யாரையும் பிடித்து வந்ததல்ல அது யாருக்கும் பிடிக்காததை அதிகம்  பிடித்ததால் நேர்ந்தது!


இவைகளின் வண்ணங்கள் எண்ணில் அடங்காதவை. 


வண்ணங்கள் மட்டுமல்ல அவை நெய்த படி இருக்கும் எண்ணங்களும் தான்!


இவை செயற்கைத் தாயின் செல்ல பிள்ளைகள்.


நெகிழா தன்மை  கொண்ட நெகிழி இதயம் இவற்றிற்கு உண்டு.


ஆதலால் அதனோடு எதுவும் ஒட்டுவதில்லை.


அவற்றோடு ஒட்ட  வேண்டும் எனில்,


உருகுதலே ஒரே வழி,


மாறாக  உணருதல் இருந்தால் ஒதுங்கிவிடும் அல்லது ஒதுக்கப்படும்!


முகமூடி களவாடலாம் முகமூடியை ஒருபோதும் களவாட முடியாது!


இது குறுக்கு வழி அதிகாரத்தை பிரயோகித்து,


விகாரம் என்னும் அலங்காரம் தரிக்கும்!


இதை நெருங்கி சென்றாள் சாகசித்து பதுங்கிவிடும்,


பதுங்கி பயந்து நின்றால் பரிகசித்து ஓலமிடும்!


இது எந்த அளவுகோலையும் விரும்புவதில்லை,


அளவற்ற வடிவுடன் இருத்தலும் அதன் வழியே பிழைத்தலும் தான் இதன் போர் குணம்!


ஆனால் இதற்கு ஒரு கோல்நிச்சயம் உண்டு,


அது அருவருப்பு கொண்டு செய்யப்பட்ட குறிக்கோள், 


அதன் உருவமே இசையாய் மீட்ட அல்ல வசமாய் வைத்து  கோல் மூட்ட!


முகமூடிகளுக்கு பெரும்பாலும் முகவரி கிடையாது, 


ஆனால் முகவரிகளை தன் வயப்படுத்தும் தலைமுறையின் வழி தோன்றல் அவை!


இவற்றை சூடும் முகங்கள் பின்பு ஒரு காலத்தில் மீட்பார் இன்றி  வாடும்,


இவற்றால் வாடும் முகங்கள் நிச்சயம் நிம்மதியை ஒரு நாளிலெனும் சூடும்!

இவன். 


முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!