திரை மறைவின் குத்தாட்டம்!
திரை மறைவின் குத்தாட்டம்!
யார் அங்கே?
திரையிட்டு இருப்பதால் தெரியவில்லை.
மறைந்திருப்பதால் நீ மறைபொருள் அல்ல.
மறை பொருளை அறிந்து கொள்ள முடியாது.
நீ ஒரு மர்ம பொருள்!
நீ மர்மமானது உன் உருவத்தால் அல்ல.
உன் செயல்களே அதற்கு காரணம்.
திரை மறைவால் நீ என்ன இழந்தாய் தெரியாது.
ஆனால் உன் முதுகெலும்பு உன்னுடன் இருக்காது.
அல்லது நீ அதை மறந்திருக்க கூடும்.
அது சரி குனிந்து இருக்கையில் அதன் நினைவு நிலைத்திருக்காது தானே?
திரைக்குப் பின் இருப்பது தான் தெரிந்து விடுகிறது.
பிறகு திரையிட்டு என்ன லாபம்?
திரைக்கு முன் நிகழும் குமுறலும் குழப்பமும் என்கிறாயோ?
அவற்றை வைத்து என்ன செய்வாய்?
அவற்றை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடுவேன்?
திரைக்குப் பின்னால் தானே?
திரைக்குப் பின்னால் இருப்பவர்களின் பின்னால் ஓடுவேன்!
அது உனக்கு தேவையில்லாத வேலை.
யாரும் பார்க்காமல் பார்த்துக் கொள்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!
திரைக்குப் பின்னதான இயக்கம் சுவாரஸ்யமானது.
அதை ஒரு முறை அனுபவித்து விட்டால்,
அதன் சுகத்தில் மனதை லயித்து விட்டால்,
ஒளிந்து, நெளிந்து ஓசையின்றி நுழைந்து விட்டால்,
சட்டங்களை இஷ்டம் போல் வளைக்கலாம்!
நியாயங்களை அடித்து துவைக்கலாம்!
வகுக்கப்பட்ட விதிகளின் விலா எலும்பை உடைக்கலாம்!
உள்ளச்சான்றுடன் இருப்பவரை ஒரு உலுக்கு உலுக்கலாம்!
உண்மை பேசுபவரை உண்டு இல்லை என்று ஆக்கலாம்!
தலை வணங்கும் தகுதி கொண்டு பிழைக்கலாம்!
தனக்கு ஏற்றவாறு தட்பவெப்பம் அதை குவிக்கலாம்!
தான் என்று கிடக்கும் சுயநலத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம்!
தன்னை வெறுக்கும் தைரியத்தை தகர்க்கலாம்!
திரையது விலகினால் என்னவாகும்?
திரையிட்டவை எல்லாம் கரை பட்டவை என்பதால் கவலை இல்லை!
எங்கோ முறையிட்டு அவற்றை கரை சேர்க்க தேவையில்லை.
அரைகடல் ஓடி மறு திரை தேற்றலாம்!
திரை எப்பொழுது எடுக்கப்படும்?
ஒற்றுமை பறை சாற்றினால் மட்டுமே அது விளக்கப்படும்!
திரைக்குப் பின்னால் அரங்கேறுவது முத்திரை அல்ல.
அது என்றுமே நித்திரையை பறித்து எடுக்கும் மாத்திரை!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment