அவமானம் என்னும் நான்!
அவமானம் என்னும் நான்!
இப்பொழுதெல்லாம் நான் நிம்மதியாக இருக்கிறேன்.
அநியாயமும் அதர்மமும் என்னை நன்கு பார்த்துக் கொள்கின்றன.
இப்பொழுது எனக்கு தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
நான் போகும் இடத்தில் எல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பினை பெற்று விடுகிறேன்.
அதிகார வர்க்கத்திற்கு ஆயுதங்கள் தேவைப்படுவதில்லை, இப்பொழுதெல்லாம் நானே அந்தப் பொறுப்பினை கவனித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இலக்கு அரச்சிந்தனையை அறுத்து எறிவது!
ஒற்றுமையாய் எண்ணுவதை உண்டில்லாமல் ஆக்குவது!
நல்லதுக்காக ஒன்று கூடுவதை நொறுக்கி தள்ளுவது!
தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் குணத்தை முட்டி வீழ்த்துவது!
உழைத்து முன்னேற யாராவது கருதினால் உண்டில்லை என்று ஆக்கி விடுவேன்.
தொழிலில் நேர்மை என்று யாராவது பிதற்றித் திரிந்தால் பார்த்துவிட்டு பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன்!
குணசீலர்களை தாக்குவது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!
அடுத்தவர்களை கெடுக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் எனது அன்றாட உணவு!
துரோகம் செய்யக்கூடாது என்னும் மாந்தர்களே, உங்களை மையப் புடைத்து விடுவேன் ஜாக்கிரதை!
நான் தாக்கினால் ரத்தம் வராது மாறாக, தன்மானம் தகர்க்கப்பட்டதன் சத்தம் வரும்!
ஜாதி மறுப்பு, மத துரப்பு, சமத்துவமே சிறப்பு என்னும் நினைப்பு கொண்டவர்களே என் உடலை பலப்படுத்தும் கால்பந்து!
உளச்சான்று கொண்டு யாரேனும் அகப்பட்டால் ஊசி சொற்களைக் கொண்டு படையெடுப்பேன் புரிகிறதா?
ஏமாற்ற மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், தீங்கு நினைக்க மாட்டேன் என்று எவரேனும் இருந்தால் என் ஏஜென்ட்களிடம் சொல்லி விடுங்கள் விளங்கியதா?
எனக்கு இன்னும் அதிக ஆள் தேவைப்படுகிறது.
எதற்கென்றா கேட்கிறீர்கள்?
அவமானப்படுத்தும் புனித தொழிலை அனுதினமும் செய்து பிழைத்து கிடக்க!
சிரித்துப் பேசி அழகாய் குழிப்பறிப்பவர்கள்,
தன் தகுதியை மறைக்க மற்றவரின் தகுதியை அவமதிப்பவர்கள்,
தன்னால் மட்டுமே எல்லாம் தனக்கு மட்டுமே அனைத்தும் அத்துபடி என்று அத்து மீறுபவர்கள்,
தான் வளர, தான் மட்டுமே வாழ எவரை வேண்டுமென்றாலும் இடித்துரைக்கும் இடியமீன்கள்,
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியாவது சூழலை குழப்பி யாரையேனும் பலி கொடுத்து தலைநிமிர்ந்து நிற்கும் புல்லுருவிகள்,
யாரும் நிம்மதியாக இருக்கக் கூடாது, யாருக்கும் எதுவும் கிடைத்தூ விடக்கூடாது என்கிற எண்ணத்தை இதயமாய் கொண்ட இக்கால இட்லர்கள்,
போன்றோரை எங்கேயும் பார்த்தால், எவ்வித அடையாள அட்டையும் வேண்டாம் அப்படியே அழைத்து வாருங்கள்!
வேறென்ன நான் என்னைப் பற்றி சொல்லுவது.
தன்னடக்கமும் கூச்சமும் தடுப்பதால் இந்த அளவில் முடித்துக் கொள்கிறேன்!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்.
Comments
Post a Comment