அந்த மூச்சுக்காற்றை என்ன செய்வீர்கள்?
அந்த மூச்சுக்காற்றை என்ன செய்வீர்கள்?
அரை அடுத்த நொடியே தேவைப்படுகிறது.
வெளியேறி விட்டு வழி விடுங்கள்.
பூட்டி வைப்பதற்கு போட்டா போட்டி என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை.
உங்களின் பத்து ஆண்டு இல்லை அதற்கு மேல் பல ஆண்டுகள் இருந்ததற்கு பலவந்த வெளியேற்றம் எனும் விருது தந்திருப்பதாக உணர்ந்தாலும் பொருட்டு இல்லை.
உங்களின் பொருளை எடுத்து வைக்க உங்களை சரிவர கேட்கவில்லை என்று உங்களுக்கு தோன்றினால் அதைப்பற்றி எங்களுக்கு தெரியாது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?
உங்களின் நாற்காலிகளும் மேசைகளும் நகர்ந்த பிறகு உங்களுக்கு என்ன யோசனை?
அதனுடன் உங்களின் நிம்மதியையும் மன அமைதியையும் எடுத்து வைத்து விட்டோம் தேவைப்பட்டதால்.
பல்லாயிரம் வகுப்புகள் எடுத்து முடித்து வந்த கால்வலியை அங்கு தான் குவித்து வைத்திருந்தோம் என்கிறீர்களா?
அதையும் கவர்ந்து எடுத்து சென்று வைக்க இடம் இல்லாததால் மேலதிக உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.
உங்களின் வேர்வையை துடைத்த பாவப்பட்ட மின்விசிறிகள் இப்பொழுது அங்கு வேர்த்து தான் கிடக்கின்றன.
உங்கள் வருகையால் தினம் தினம் கண் சிமிட்டிய அந்த அறையின் தரை கண்மூடிப் போய் தான் இருக்கிறது.
நீங்கள் தண்ணீர் பருகிய எந்திரம் கூட நகர்த்தும் பொழுது வர மறுத்தது தான்.
இவை அனைத்திற்கும் உணர்ச்சியும் சுயமரியாதையும் கடத்திய உங்களிடம் கருத்து கேட்டால் எப்படி ஒப்புக் கொள்வீர்கள்?
அதனால் நீங்கள் இல்லாத நேரம் பார்த்து அதிரடியாய் இறங்கி விட்டோம் களத்தில்!
சில நூறு முறை அந்த அறையை கூட்டிப் பெருக்கி கூட உங்களின் ஒற்றுமை ஐயோ அதனை வெளியேற்ற முடியவில்லை.
அப்படி இருக்கையில் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாதா?
அந்த அறையை பளபளக்க துடைத்த போதெல்லாம் நீங்கள் சேகரித்து வைத்த புன்னகைக்கு முன் அது தோற்றுப் போனது.
அதை அனுதினம் பார்த்து புழுங்குவதற்கு மாறாக புறப்பட்டு விட்டோம் வெளியேற்ற புரிகிறதா!
அறையின் விளக்குகளும் உங்களின் இலக்குகளும் எத்தனை தடைகள் வந்தாலும் பிரகாசித்துக் கொண்டே இருந்தால்?
கண்டு காணாமல் இருக்க முடியவில்லை அதனால் உங்கள் பொருட்களைக் கொண்டு எங்கோ வைத்து விட்டோம் வெளியேறுங்கள்!
நீங்கள் வைத்திருந்த உடைமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் வெளியேற்றிக் கொண்டிருக்க,
அந்த சுவற்றில் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒரு நீதியின் குரல் கேட்கத்தான் செய்தது எங்களை?
ஆமாம் அந்த ஒன்றுபட்ட மூச்சுக்காற்றை என்ன செய்வீர்கள் என்று!
முனைவர். உ. மகேந்திரன்.
Comments
Post a Comment