ஆசிரியர்களாம் எங்களை தெரியுமா?

 ஆசிரியர்களாம் எங்களை தெரியுமா?


தயவுசெய்து கொஞ்சம் பொறுங்களேன்.


வேறொரு இடத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கும் அந்த வாழ்த்துச் செய்திக்கு என்ன அவசரம். 


அது எப்படியும் அங்கு தானே இருக்க போகிறது!


இணையதளம் இருக்க அதற்கு ஒரு குறையும் வரப்போவதில்லை.


முதலில் சொல்லுங்கள் நீங்கள் கடைசியாக எங்களை எங்கு கண்டீர்?


கல்விக்கூடங்களில் எங்களை கண்ணியத்துடன் கண்டது கனவு போல் தெரிகிறதா? 


அவர்களின் அறிவு துலங்க, அதற்கு உளப்பூர்வமாய் எங்களை வணங்க, நகர்ந்த எங்கள் பொன்னான கணங்கள் பொசுங்கியே போனது தெரிகிறதா?


எப்படி ஆசிரியரை அப்படி பேசலாம் என்ற பெற்றோரின் முன், நாங்கள் மலை போல்  உயர்ந்து நின்றது உங்கள் மனதில் ஒரு ஓரத்திலேனும் இருக்கிறதா? 


அவர்கள் எழுதிய தாள்களை,  அதில் அரும்பிய வளர்ச்சியின் நாட்களை கண்டு வியந்து கண்ணீர் சிந்திய எங்களின் பெருமித முகங்கள் மறைந்து தான் போனதா? 


கரும்பலகை கொண்டு, இந்த உலகை அடையாளம் காட்டிய, ஆசிரியர் முன் சமூகமே இருக்கை கூப்பி நின்றது எங்கோ நடந்தது போல் நிழலாடுகிறதா?


அறிவொளி புகட்டி,  அவர்தன் கண்ணொளி இழந்து புல்வெளி புழுபோல் ஒடுங்கி போன உருவங்கள் உங்களின் நெஞ்சத்தில் இருக்கிறதா?


டேய் என்று சொல்லி அடித்தவன், உயர்ந்து வந்து முன்னாள் நிற்க, எப்படி தம்பி இருக்கீங்க என்று கேட்ட அந்த குரல்கள் உங்களின் காதுகளில் சற்றேனும் எதிரொலிக்கிறதா?


நம் நல்லதுக்கு தான் கண்டிக்கிறார்கள் என்று நம்பி கீழ்ப்படிந்த மாணவர்கள் முன், பாழடைந்த நாற்காலியில் அமர்ந்து பாடம் எடுத்த அந்த வாத்தியின்  உருவம் வந்து வந்தேனும் போகிறதா?


அறிவு தரும் செருக்குடன்,  தன்மான நடை போட்டு, தலைநிமிர்ந்து நடந்த அந்த உருவங்கள் எங்கோ ஓரத்திலேனும்  தென்படுகிறதா?


சமூகம் பண்பட, தன் கண் பட்ட குழந்தைகளை எல்லாம் விண்டோட  வைத்தூ, கால் மண் பட நடந்த எளிய உருவங்கள் நீங்கள் அறிய கிடைக்கிறதா?


முட்டிகளோ தேய்ந்திருக்க, உடம்பு மொத்தமாய் தளர்ந்து இருக்க, முகம் மலர்ந்து இருந்து மாணவக் கண்மணிகளோடு கலந்திருந்த நல்லோரை நினைத்துப்  பார்க்க முடிகிறதா?


கடினமான பாடங்களையும், நளினமாக நடத்தி, என்னிலும் எழுத்திலும் கற்போரை பொன்னென மின்னச்செய்த மாந்தரை இந்த மானுடம் மறந்ததா?


சம்பளம் பெரிதல்ல, எந்தப் பின்புலமும் பொருட்டல்ல, தன்னலத்தை துடைத்து அப்பால் தள்ள, இளம் உள்ளங்களுக்கு உரம் ஊட்டிய  கல்வி கண் பெற்றவரை  இழந்து கொண்டிருப்பது இப்பொழுதாவது தெரிகிறதா?


ஆளும் வர்க்கமும், பிரிவினை செய்யும் தர்க்கமும்  புகுந்துவிட,, வகுப்பறை விட்டு வெகு தூரம் அனுப்பப்பட்ட ஆசிரிய அப்பாவிகளின் நிலை குறித்து  யாருக்காவது புரிகிறதா?


மாணவர்களின் மனதில் பல ஆசையை புகுத்தி, படிக்கும் எண்ணத்தை வெளியே துரத்தி, சொல்லித் தருபவரை எதையும் சொல்லக்கூடாது என்று திருத்திய கொடுமைக்குத் தள்ளியது, உங்களுக்கு ஒரு துளியேனும் வந்து சேர்ந்ததா?


அதிகாரிகள் என்கிற பெயரில், ஆளுக்கு ஒரு ஆணையிட, அதை எங்கும் முறையிட முடியா நிலையில், தலை எங்கும் நறையிட்டு போய், உள்ளம் பாழ்பட்டு  போய் கிடக்கும் பிரஜைகளின் வேதனை உங்களின்  மனதினை அடைந்ததா?


ஓய்வுக்குப் பின் ஊதியம் கேட்டால், ஓய்வு நீங்கள் பெறுவதே உங்களுக்கு ஊதியம் தான் என்று ஏளனம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு நொறுங்கிப் போய் இருக்கும் எங்களின் நிலை உங்களின் இதயங்களை தொட்டதா?


ஆட்சிக்கு வருவதே, ஆசிரியரின் நிம்மதி பறிக்கும் சூழ்ச்சியை செய்யத்தான் என்கிற நிலை வளர்ந்த பின்னும், எங்களை வருவோர் போவோரெல்லாம் ஏச்சிக்கும் பேச்சுக்கும் எனும் அவஸ்தைக்கு தான்  வைத்திருப்பது உங்களுக்கு இன்னும் கூட புரியாமல் தான் இருக்கிறதா?


வகுப்பெடுக்க முடியாமல், கணிப்பொறியில்  மாணவரின் குறிப்பை தலைக்கு நூறு  என பதிவேற்றி, தொழில் திருப்தி இன்றி துயரத்தில் தவிக்கும் எங்களின் இடத்திலிருந்து எதையாவது உணர்ந்து கொள்ள முடிகிறதா?


மந்திரிகளும் தந்திரிகளும் கோடியில் சம்பாதிக்க, சில நூறு நிதி உயர்வு பெற்றால், எல்லோரும் கூடி ஐயோ என்று எங்கள் காதுபட புலம்பிட,  கூனிக்குறுகி நிற்கும் எங்களின் கொடுமை உங்களால் உள்வாங்க முடிகிறதா?


திரை நடிகனிடம் தன் மூளையை அடகு வைத்த மாணவனை மீட்டிட, கண்டிப்பு காட்டிட முடியாமல், அதிகார வர்க்கத்தால் நிந்திப்பு பெறும் நிலையில் இருக்கும் எங்களை சிந்திக்க உங்களால் எப்பொழுதாவது மட்டுமே முடிகிறதா?


அனுதினமும் அவமானமும், ஆதிக்கமும், அயர்ச்சியும்  ஆட்டி வைக்க, ஒரு தினத்தில் நீங்கள் கொட்டிக் கொடுக்கும் வாழ்த்தினை  வைத்து என்ன செய்ய?


இவற்றை உங்களுக்குள் ஓட விட்டு பாருங்கள்!/.


சமூக அல்லது மனித நீதிபடி நல்ல தீர்ப்பினை கூறுங்கள். 


பிறகு உங்கள் உதடுகள் உச்சரிக்கட்டும். 


ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்று உற்சாகமாக! 


இவன். 


முனைவர். உ. மகேந்திரன்.

Comments

  1. மிகவும் அருமை

    ReplyDelete
  2. உங்களின் சொல்வாள் செவிகள் அற்ற இந்த சமூகத்திற்கு சென்று சேரட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!