கலைஞர் என்னும் காவலன்!
கலைஞர் என்னும் காவலன்!
அடங்கா சமூக சிந்தையால் பல மடங்காய்
சேவை தந்து, இல்லாமை விலங்கை உடைத்தவர்!
உரிமை மறுக்கப்பட்ட சமூகங்கள், திறமை வார்க்கப்பட்டு ஜொலித்திட, கடமையை
முதுமை முட்ட செய்தவர்!
ஊனத்து ஜாதியரை, தன்மானத்து
ஏணி ஏற்றி, வானத்தைத் தொடர் செய்த, ஞானத்து சூரியன் அவர்!
உதவித்தொகை அல்ல, உதவத்தான் தொகையே என்பதை உணர்ந்து, திட்ட
வகைகளை, எதிரியும் கைதட்ட தந்த, பண்பினை
நட்ட ஏழை பங்காளனவர்!
கலங்கியோருக்காக கலங்கியதும், முடங்கியோரை மீட்டிட முழங்கியதும், ஒடுக்கியொரை ஒடுக்க உறுமியதும், அவரின்
இல்லாமையில் அன்றோ அரும்பியது!
கல்விக்கு காவல் நின்று, சனாதன சூழ்ச்சி வென்று, பள்ளிக்கு
போகாமல் தள்ளிய தந்திரத்தை கொன்று, இன்று இல்லையே என்று ஒன்று கூடி
புலம்பச் செய்த அறிவுக் குன்று அவர்!
சட்டத்தின் இருட்டறையில், சில வட்டத்து ஆட்கள், அடித்த அநீதி கொட்டத்தை கண்டித்து,
காட்டமாய் உடன்பிறப்புக்கு கடிதம் தீட்டிய எழுத்து பட்டம் அவர்!
ஆண்டுகள் நான்கு போராடியும், பார்வையற்றோர் சட்டப்படி வேலை வேண்டி வீதி வந்து மன்றாடியும்,
காணவியலா முதல்வரை நம்மைப்
போல் ஒருவன் அருகில் இருந்து துதி பாடியும், இருக்கும்
கொடும் சூழலில், எங்களின் குரல் அழைக்கும் தலைவா,
நீ இக்கரையில் அக்கறை இன்றி இருக்கும் ஆட்சி ஆட்களை பொசுக்க எழுந்து வா!
மகிழுந்திலிருந்து, பார்வையற்றோரின் மனுவந்து பெறுவதை என்ன சொல்ல? நகரும்
நாற்காலியில் இருந்து பறந்து, சந்துகள் நுழைந்து சங்கடம் போக்கிய சூட்சுமம் சொல்லிட கண்ணாடி போட்ட
கில்லாடியே மீண்டும் வா!
முதல்வரின் இருக்கையில் நீ அமர்ந்த வரை,
விளிம்பு நிலை மாந்தரை மரியாதை உடுக்கை அணியச் செய்தாய், வதைபட்ட திருநங்கையருக்கு மிடுக்கை
வழங்கினாய், பல கதை கண்ட பெண்களை அறிவு உரம் ஏற்றி
முடுக்கினாய், மெய்
அதன் தடங்கள் கொண்டவருக்கு அரசில் இடங்கள் தந்து உயர்த்தினாய்!
மன்னர்கள் கண்ட வசதியை, வெறும் இன்னல்களே கண்டவரும் பெற்றிட, செய்தித்தாள்
சன்னலின் அருகே அமர்ந்து, மின்னலாய் திட்டம் வகுத்த, அண்ணலே உன்னைப் போல் இங்கு யாரும் உண்டோ?
இடித்து உரைத்தோரையும் நன்கு
படித்தறிந்து துவைத்து எடுத்தாய், அன்றாடம் கேலி தொடுத்து களித்தோரையும்,
இலக்கியத்தில் வடித்தெடுத்து அன்றோ சுளுக்கு எடுத்தாய்!
முரசில் நீ ஒலித்ததெல்லாம், அரசின் ஆணையில் இணைத்து விட்டாய், பழசாய்
போன ஜாதி ஆட்டங்களை, தினுசாய் ஆணையிட்டு அருமை ஆசானே நீ வகுப்பு எடுத்தாய்!
சினிமாவில் இருந்து வந்து சுயநல இனிமா
தருபவர்கள் மத்தியில், சித்திரங்களில் வசன சூத்திரங்களை
புகுத்தி, மடமை சரித்திரங்களை புரட்டினாய்,
அவற்றை தூக்கிப்பிடித்த தரித்திரங்களை தோலுரித்துக் காட்டினாய்!
ஊனமுற்றோருக்கு எண்ணற்ற சலுகை தந்து,
கொடுத்தாயே ஊக்கத்தின் மருந்து, அவை
போனதோ உன்னோடு கலந்து, இல்லை வேண்டாம் இந்த திராவிடம் இருக்கும் வரை தொடரட்டுமே அந்த
சமூக நீதி விருந்து!
உன்னை கிழவன் என்றார்கள், ஆனால் நீயோ உழவனுக்கு சந்தை
தந்த விந்தைக்காரன், உன்னை ஊழலின் ஊற்றுக்கண் என்றார்கள்,
ஆனால் எளியோர் கொண்டிருக்கும் வாழ்தலில் உழன்றுகிடக்கும் உண்மை வீரன் நீ!
அதிகார வட்டம் பாடம் எடுக்கும்
ஆசிரியரை தேவையற்ற திட்டம் போட்டு முடக்குகிற வேலையில், நீ
இருக்க வேண்டும், ஆசிரியரும் மாணவரும் உரையாடிட உன்னை
தளபதி எனக் கொண்டு அறிவு போர் தொடுக்க வேண்டும்!
அனைவரையும் அர்ச்சகர் அறியனை ஏற்றினாய்,
அந்த சமத்துவ பாதையை நீதான் காட்டினாய், இன்று
ஆணவக் கொலைகள் நடக்குது, அதை ஆட்சி சாட்டை கொண்டு அடக்க நீ
இல்லையே என நெஞ்சம் துடிக்குது!
உன் வழியில் ஆள்வதாக ஓலமங்கே ஓயாமல்
கேட்குது, பெரிய ஊடகங்களும் வெட்கமின்றி வேடிக்கை
பாக்குது, மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு தேர்வு
கோப்போ உச்சியில் இருப்பவரின் மேசையில்
எழுப்ப ஆளின்றி தூங்குது, இவ்வேளையில் எங்களின் தம்பி தங்கைகளுக்கு உங்களின் போராட்ட குணம்
வேண்டும் என உள்ளம் ஏங்குது!
நீங்கள் மக்கள் மீது கொண்ட காதல்,
இல்லாமல் போனது ஐயா அதனால் இங்கு ஜாதி மத மோதல், இணையவழியில் மற்றவரை இடித்துரைத்து
சாதல், நீர் இல்லாத வேலையில் எப்படியும்
ஏமாற்றி நடக்குது இங்கு தேர்தல்!
சங்கங்களின் முதுகெலும்பு உடையிது,
அப்படிச் செய்பவரே
சிங்கங்கள் என சொல்லி சில அலையுது, உன்னைப்போல
உறுதியான தலைவன் வேண்டும் ஐயா இல்லை என்றால் எப்படி இந்த அடிமைத்தனத்தை களைவது!
நீதிக்கட்சி தொடங்கித் தந்தது, உங்களின் கைபட்டு
சாதனைகலாய் மலர்ந்தது, அவை அனைத்தும் ஓரிடத்தில் நின்று விட்டதே என்பதுதான் இப்போது மக்கள்
ஒருமித்து உணர்வது!
இளையவருக்கு வேலை தராமல், பழைய ஆட்களுக்கு பொறுப்பு தந்து, நம்ம
அரசு கிடந்து அணத்துது, கொடுக்க இல்லை பணம் என்னும்
தீது நடக்குது, போதையில் மூழ்குறான் இளைஞன் தடுங்கள்
என்று சொன்னால் இவர்களுக்கு எங்கே உரைக்குது, இது
உங்கள் ஆட்சி யாம், உரக்கச் சொன்னாள் அந்தக் காற்றும்
கைதட்டி, சிரிக்குது!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்.
Comments
Post a Comment